சரக்கு வேன்களில் காளைகளை ஏற்றி சென்றவர்களுக்கு அபராதம்




புதுக்கோட்டை மாவட்டம், வன்னியன்விடுதியில் நடந்த ஜல்லிக்கட்டிற்கு விராலிமலை பகுதியில் இருந்து ஒரு சரக்கு வேனில் 3 காளைகளை ஏற்றி சென்று விட்டு பின்னர் வீடு திரும்பிய போது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர். 2 காளைகள் செத்தன. மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்குடன் நேற்று போக்குவரத்து துறை அதிகாரிகள் வடமலாப்பூர் ஜல்லிக்கட்டிற்கு காளைகளை அழைத்து வந்த சரக்கு வேன்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஒரு சரக்கு வேனிற்கு ஒரு காளை மட்டும் ஏற்றிவர வேண்டும். காளைகளுடன் இரு நபர்கள் மட்டுமே வரவேண்டும் எனவும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காளைகளின் உரிமையாளர்கள், வாகன உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினர். மேலும் விதிமுறைகளை மீறி காளைகளை ஏற்றிவந்த 15 வாகனங்களுக்கு இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சசிக்குமார் தலா ரூ.500 அபராதம் விதித்தார். இனி நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை உரிய விதிமுறைகளோடு சரக்கு வேன்களில் அழைத்து வர வேண்டும் எனவும் விதிமுறைகளை மீறி சரக்கு வாகனங்களில் அழைத்து வரும் உரிமையாளர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments