சுருக்குமடி வலை விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.




சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இடைக்கால அனுமதிக்கு கோரிக்கை

இதில் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், ஏ.சிராஜுன் ஆகியோர் மீன்பிடிக்காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவிட்டதால், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க இடைக்காலமாக அனுமதிக்க வேண்டும். அரபிக் கடல் சூழலையும், வங்காள விரிகுடா சூழலையும் பிரித்தறிய வேண்டும். சில மீன்கள் ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும். சில மீன்கள் கடல் பரப்பில் கிடைக்கும். கேரள சூழலைக் கருத்தில்கொண்டு சுப்ரீம் கோர்ட்டு 1994-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை இந்த விவகாரத்தில் பொருத்திப் பார்க்கக் கூடாது என வாதிட்டனர்.

தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

அதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, சஞ்சய் ஹெக்டே வாதிடுகையில், சுருக்குமடி வலை என்பது ஒரு எக்டேர் அளவு கொண்டது. இதை அனுமதித்தால் அபூர்வ வகை கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். சுருக்குமடி வலையை அனுமதிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே 2 தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வலையை அனுமதித்தால் ஏனைய மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

மீன்களுக்கு தெரியாது

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் இடைக்கால உத்தரவு மீட்கமுடியாத விளைவுகளை ஏற்படுத்திவிடும். 12 கடல் மைலுக்கு அப்பால் சுருக்குமடி வலையை அனுமதிக்கும் மத்திய அரசின் பிரமாணபத்திரத்தின் அடிப்படையில் எவ்வித இடைக்கால உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கக்கூடாது. 12 கடல் மைல் எல்லை எல்லாம் மனிதர்கள் உருவாக்கியது. அதுகுறித்து ஆழ்கடல் மீன்களுக்கு தெரியாது. ஆயிரக்கணக்கான பாரம்பரிய மீனவர்கள் குறித்து மட்டுமே தமிழ்நாடு அரசு அக்கறை கொள்கிறது. 12 கடல் மைலுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளை அனுமதிக்கும் எவ்வித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க கூடாது. அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில் அதை தமிழக அரசு கண்காணிக்க இயலாது.

அதிகாரத்தை மீறியது

12 கடல் மைலுக்கு அப்பால் சுருக்குமடி வலையை அனுமதிக்கும் மத்திய அரசின் நிலைப்பாடு அதிகாரத்தை மீறிய ஒன்று. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி இடம்பெற்றிருந்தும், அவர் கருத்தை கேட்காமலும், ஒப்புதல் இல்லாமலும் நிபுணர் குழு அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments