கட்டுமாவடியில் பஸ் நிலையம், பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்




சாலையோரம் பஸ்களை நிறுத்துவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. எனவே கட்டுமாவடியில் பஸ் நிலையம் மற்றும் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

மீன் ஏலக்கடைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதி தொடக்கமாக கட்டுமாவடி உள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. மீன் ஏலக்கடைகள் அதிகாலை 4 மணிக்கு திறப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. இங்கு மீன்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும், வியாபாரிகளும் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இதனால் அதிகாலை முதலே கட்டுமாவடியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் இங்கு வரக்கூடிய வாகனங்கள் சாலையோரம் நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. கட்டுமாவடி கடற்கரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு கடற்கரையையொட்டி ராமநாதசுவாமி கோவில் உள்ளது.

உப்பளம்

இங்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் பஞ்சமூர்த்திகள் கடலுக்குள் சென்று புனித நீராடுவது வழக்கம். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலுக்குள் இறங்கி புனிதநீராடிய பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்குள்ள கடற்கரையில் புனித நீராட வருகை தருகின்றனர்.

கட்டுமாவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் நகர பஸ்கள் கட்டுமாவடியில் திரும்புவதால் நீண்ட நேரம் சாலையோரத்தில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படக்கூடிய சூழல் ஏற்படுகிறது. இதனால் மற்ற வாகனங்கள் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் இடநெருக்கடி ஏற்படுகிறது.

கழிப்பிட வசதி

இதேபோன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இருந்தும் தனியார் பஸ்கள் கட்டுமாவடியுடன் திரும்புகின்றனர். இந்த பஸ்களும் பஸ் நிலையம் இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், இட நெருக்கடியும் ஏற்படுகிறது. கட்டுமாவடியில் நாள்தோறும் சுற்றுலா பஸ்கள், லாரிகள், கார்கள் போன்ற பல்வேறு வாகனங்கள் கடைத்தெருக்களில் நின்று செல்கின்றன. இதனால் இட நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் அதிகாலை மீன் மார்க்கெட்டிற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் வருவதால் கழிப்பிட வசதி இல்லாததாலும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கட்டுமாவடியில் பஸ் நிலையம் மற்றும் பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசல்

ராஜா:- தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் தனியார் பஸ்களும், நகர பஸ்களும் கட்டுமாவடியுடன் திரும்புகின்றன. இவ்வாறு திரும்பும் பஸ்கள் மீண்டும் புறப்பட நீண்ட நேரம் ஆவதால் சாலையோரங்களிலே நிறுத்தப்படுகிறது. இதனால் கட்டுமாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையம் அமைத்துக்கொடுத்தால் பஸ்களை நிறுத்துவதற்கு வசதியாக இருக்கும். பட்டுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பயணிகள் ஒரு பஸ் நிறுத்தத்திலும், அறந்தாங்கி மார்க்கமாக செல்லும் பயணிகள் இன்னொரு நிறுத்தத்திலும், மீமிசல் மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றொரு பஸ் நிறுத்தத்திலும் நிற்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே பஸ் நிலையம் அமைத்துக்கொடுத்தால் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் பயணிகள் ஒரே இடத்தில் பஸ் ஏறும் சூழ்நிலை ஏற்படும். இதே போன்று பஸ் நிலையத்தோடு, பொதுக்கழிப்பறையும் அமைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் கட்டுமாவடியில் உள்ள மீன் மார்க்கெட் அதிகாலை 4 மணிக்கு செயல்படுவதால் அதிகாலையில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே மீன் மார்க்கெட்டுக்கு வரக்கூடிய பெண்கள், முதியவர்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி பொதுக்கழிப்பிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

நிற்காமல் செல்லும் பஸ்கள்

பரமசிவம்:- கட்டுமாவடியுடன் திரும்பும் நகரப் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் கட்டுமாவடி கடை தெருவில் நிறுத்தி வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. கடை தெருவுக்கு சற்று ஒதுக்குப்புறமாக பஸ் நிலையம் அமைத்தால் இட நெருக்கடி ஏற்படாது. மீன் மார்க்கெட் வரக்கூடியவர்களும், மீன் வியாபாரம் செய்யக்கூடியவர்களும் பஸ்களில் ஏறவும், இறங்கவும் இட நெருக்கடியால் சிரமப்படுகிறார்கள். பஸ் நிறுத்த இடம் இல்லாமல் இருந்தால் சில சமயங்களில் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை செல்லக் கூடியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பஸ் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ்நிலையம் அமைக்க வேண்டும்

பைசல் அகமது:- இங்குள்ள சுற்று வட்டார பகுதிகளுக்கு கட்டுமாவடி மையப்பகுதியாக இருப்பதால் கிராமப்புறங்களில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், ராமேசுவரம், நாகூர், ஏர்வாடி, வேளாங்கண்ணி, சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய மக்கள் கட்டுமாவடி வந்து பஸ் ஏறி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மற்ற பகுதிகளில் இந்த பஸ்கள் நிற்காது. மேலும், இங்குள்ள மீன் மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருவதாலும் இங்கு அவசியம் பஸ் நிலையம் தேவைப்படுகிறது. வெளியூர்களில் இருந்து அறந்தாங்கி செல்லக் கூடியவர்கள் கட்டுமாவடியில் இறங்கி பஸ் மாறி செல்கிறார்கள். கட்டுமாவடியில் பஸ் நிலையம் அமைத்துக் கொடுத்தால் சாலையோரங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டு இட நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments