போட்டித்தேர்வுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு வருகிற 1-ந் தேதி முதல் தொடக்கம்




புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஸ்டாப் மற்றும் ஹவல்தார் பணியிடங்களுக்கான தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, 11,409 உத்தேச காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.02.2023 தேதியில் குறைந்த பட்சம் 18 வயதும், அதிகபட்சம் பொதுப்போட்டியினருக்கு 27 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு 32 வயது வரையிலும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 


இத்தேர்விற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.02.2023 ஆகும். இத்தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவணைப்படி சிறந்த வல்லுனர்களை கொண்டு வருகிற 1-ந் தேதி முதல் நேரடியாக தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தேர்விற்கு விண்ணப்பித்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் விவரத்தினை decgc.pki@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments