திருச்சி அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது 118 பவுன் தங்கம்-வைர நகைகள், மடிக்கணினி, செல்போன்கள் மீட்பு




திருச்சி அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 118 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் மடிக்கணினி, செல்போன்கள் மீட்கப்பட்டன.

தொழிலதிபர்

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ்.நகரை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 55). தொழிலதிபரான இவர் சாலை மற்றும் பாலங்கள் கட்டுவதற்கான ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். மேலும், இவருக்கு சொந்தமாக கிரசர்களும், தனியார் பஸ்களும் உள்ளன. தேவேந்திரன் தனது சகோதரர் நேதாஜியுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

தேவேந்திரனின் 2-வது மகன் பாலாஜியின் நிச்சயதார்த்தம் திருச்சியில் ஒரு ஓட்டலில் நடைபெற்றதையொட்டி கடந்த 22-ந் தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அனைவரும் சென்று விட்டனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்து 23-ந் தேதி வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டு அறையின் கதவு மற்றும் பீரோ கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது.

கொள்ளை

மேலும், வீட்டில் இருந்த 10-க்கும் மேற்பட்ட அலமாரிகள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 92 பவுன் தங்க நகைகள், வைரவளையல், நெக்லஸ், பிளாட்டின ஆரம், 2 மடிக்கணினி, 4 செல்போன்கள், ரூ.1½ லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரூ.5 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை பிரிவு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் லிலி சம்பவ இடத்துக்கு வந்து மோப்பம் பிடித்து திருச்சி-கல்லணை சாலையில் சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது.

தனிப்படைகள்

இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மத்தியமண்டல போலீஸ் ஐ.ஜி.கார்த்திகேயன் உத்தரவின்பேரில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 5 மணி அளவில் மஞ்சத்திடல் சோதனை சாவடி அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்த போலீசார் முயற்சித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றதால் காரை விரட்டி சென்று கல்லணை ரோட்டில் வேங்கூர் சுடுகாடு அருகே மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய நபரை பிடித்து விசாரித்தபோது அவர், தஞ்சை மாவட்டம் திருவையாறு புதுஅக்ரஹாரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற செல்வகார்த்திக் (30) என்பதும், இவர் மீது திருவெறும்பூர், நவல்பட்டு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் ஓட்டி வந்த காரை சோதனையிட்ட போது, அதில் 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் இருந்தது. உடனே போலீசார் அந்த நகைகளை எடுத்து சென்று திருவெறும்பூரில் கொள்ளை போன வீட்டின் உரிமையாளர் தேவேந்திரனிடம் காட்டினார்கள். அப்போது அவர் அந்த நகைகள் தங்களுடையது தான் என கூறினார்.

நகைகள் பறிமுதல்

இதையடுத்து பிடிபட்ட செல்வகார்த்திக்கிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர் தான் தொழிலதிபர் தேவேந்திரன் வீட்டில் கொள்ளையடித்தார் என்பதும், கொள்ளையடித்த தங்க நகைகளை திருவையாறில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரது வீட்டில் இருந்து 92 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் அவரிடம் இருந்து 118 பவுன் தங்க-வைர நகைகள், ரூ.4½ லட்சம் கைப்பற்றப்பட்டது.

மேலும் அவரது வீட்டில் இருந்த வைரம், பிளாட்டினம், வெள்ளி நகைகளையும், 2 மடிக்கணினி, 4 செல்போன்களையும், கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்புகம்பி திருப்புலி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து செல்வகார்த்திக்கை கைது செய்தனர்.

ராமநாதபுரத்தில் திருடப்பட்ட கார்
திருச்சி சரக டி.ஐ.ஜி.சரவணசுந்தர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

திருவெறும்பூரில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தனிப்படை போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க, வைரநகைகள், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் இருந்து கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த கார் ராமநாதபுரத்தில் திருடப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைப்படி நீதிமன்ற அனுமதிபெற்று கொள்ளைபோன நகைகள் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments