டி.வி., செல்போன் விலை குறையும் தங்கம், வெள்ளி, சிகரெட் விலை உயரும் விவசாயிகள், பெண்கள், முதியோருக்கு சலுகைகள் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு




நாட்டில் இந்த ஆண்டு 9 மாநில சட்டசபை தேர்தல்களும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் வரவுள்ள நிலையில், மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

மத்திய பட்ஜெட் தாக்கல்

இந்த பட்ஜெட், நடப்பு ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டும் ஆகும்.

மரபு வழக்கப்படி நேற்று பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது துறையின் ராஜாங்க மந்திரிகளான டாக்டர் பகவத் கிஷன்ராவ் கரத், பங்கஜ் சவுத்ரி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூடி, அடுத்த நிதி ஆண்டுக்கான (2023-24) மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.

அதன்பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட்டை கையடக்க மடிக்கணினி (டேப்லட்) வடிவில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசினார்.

ஒளிமயமான எதிர்காலம்...

அப்போது அவர் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் பெற்றதன் 75-வது ஆண்டில், இந்திய பொருளாதாரத்தை ஒளிரும் நட்சத்திரம் என்று உலகம் அங்கீகரித்து இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் இதுதான் அதிகபட்ச அளவு என்பது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இது கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், உலக அளவிலான பொருளாதார மந்த நிலை நிலவியபோதிலும் சாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய பொருளாதாரம், சவால்கள் நிறைந்த தருணத்திலும், ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி சரியான பாதையில் செல்கிறது.

இன்றைக்கு இந்தியர்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். இந்தியாவின் சாதனைகளை, வெற்றிகளை உலகமே பாராட்டுகிறது.

80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒருவர்கூட பசியுடன் படுக்கைக்கு சென்று விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக 28 மாதங்கள் 80 கோடிக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கினோம். உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதி செய்யும் விதத்தில் ஜனவரி 1-ந் தேதி முதல் பிரதம மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் அனைத்து அந்தியோதயா மற்றும் முன்னுரிமை குடும்பத்தினருக்கு ஓராண்டு காலத்துக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இலவச உணவு தானியங்களை வழங்கிய வகையில் மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி செலவிட்டது.

தனிநபர் வருமானம் இரு மடங்கானது...

உலகளாவிய சவால்கள் நிறைந்த தருணத்தில் ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்பு ஆகும்.

2014-ம் ஆண்டு முதல் அரசு எடுத்து வந்த முயற்சிகள், நாட்டின் அனைத்து குடிமக்களும் ஒரு தரமான வாழ்க்கையை, கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உறுதி செய்துள்ளன.

நமது நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் இரு மடங்காக உயர்ந்து ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் ஆகி உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் உலகளவில் 5-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து, 27 கோடியாகி இருக்கிறது. ரூ.126 லட்சம் கோடி டிஜிட்டல் முறையில் பட்டுவாடா ஆகி உள்ளது.

7 அம்சங்கள் அடிப்படையில்...

இந்த பட்ஜெட், எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைக்கோடியில் இருப்போரையும் சென்றடைதல், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, வளங்களை பயன்படுத்துதல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி, நிதித்துறை ஆகிய 7 அம்சங்கள் அடிப்படையிலானது ஆகும்.

இவ்வாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி விட்டு தொடர்ந்து பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரூ.7 லட்சம் வரையில் வருமான வரி கிடையாது.....

பெரும் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகிற வகையில், தனிநபர் வருமான வரி தொடர்பாக 5 முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன. அதுபற்றி விவரங்கள்:-

* தற்போது பழைய வரி முறையிலும், புதிய வரி முறையிலும் ரூ.5 லட்சம் வரையிலான வருமானம் ஈட்டுவோருக்கு வரி ஏதும் செலுத்த தேவை இல்லை. இப்போது புதிய வரி முறையில் வரிச்சலுகை அளவு ரூ,.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுகிறது. எனவே புதிய வரி முறையில் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி ஏதும் கிடையாது.

* நடுத்தர வர்க்க தனி நபர்களுக்காக நான் 2020-ம் ஆண்டு புதிய தனிநபர் வருமான வரி முறையை அறிமுகம் செய்தேன். இது ரூ.2½ லட்சத்தில் இருந்து 6 வருமான அடுக்குகளுடனானது. இப்போது இந்த அடுக்குகளின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்படுகிறது. இதன்கீழ் வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயர்கிறது. புதிய வரி விகிதங்கள் வருமாறு:-

ரூ.3 லட்சம் வரையில் வரி கிடையாது. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையில் 5 சதவீதமும், ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையில் 10 சதவீதமும், ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையில் 15 சதவீதமும், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் 20 சதவீதமும், ரூ.15 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீதமும் வருமான வரி விதிக்கப்படும்.

இதன் காரணமாக புதிய வரி முறையில் வரி செலுத்தும் அனைவருக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும். ஆண்டு வருமானம் ரூ. 9 லட்சம் வரையில் ஈட்டும் தனிநபர் ரூ.45 ஆயிரம் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும். இது அவரது வருமானத்தில் 5 சதவீதம் மட்டும்தான். தற்போது செலுத்தும் வரியில் இது 25 சதவீதம் குறைவு ஆகும். ரூ.15 லட்சம் வருமானம் ஈட்டுகிறவர், வரியாக ரூ.1½ லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும். இது வருமானத்தில் 10 சதவீதம்தான். தற்போது செலுத்தும் வரியை விட 20 சதவீதம் குறைவு ஆகும்.

விடுப்பை பணமாக்குவதில் சலுகை

* மாதச்சம்பளம் பெறுவோர், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு புதிய முறையில், நிலையான கழிவுகள் பலன் அளிக்கப்படுகிறது. ரூ.15½ லட்சம் வருமானம் அல்லது மேற்பட்ட வருமானத்துக்கு நிலையான கழிவு பலன் ரூ.52 ஆயிரத்து 500 பெற முடியும்.

* புதிய வரி முறையில், அதிகபட்ச வருமான விதிப்பில் வருவோருக்கு அதிகபட்ச ‘சர்சார்ஜ் ’ 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

* அரசுசாரா பணியாளர்கள் ஓய்வின்போது, விடுப்பை பணமாக்குவதற்கான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக இருந்து வருகிறது. இது 2002-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும். அப்போது அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை ஊதியம் மாதம் ரூ.30 ஆயிரம் ஆகும். இப்போது ஓய்வின்போது, விடுப்பை பணமாக்குவதற்கான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சம் என்பது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு வருமான வரி விதிவிதிப்பு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விலை உயரும் பொருட்கள்

பட்ஜெட்டில் சில முக்கிய பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விலை உயரும் பொருட்கள் வருமாறு:-

* தங்கம், பிளாட்டினத்தில் தயாரிக்கப்படும் நகைகள்

* வெள்ளி பொருட்கள்

* சிகரெட் .

* மின்சார வாகனங்கள் உள்பட இறக்குமதி செய்யப்படுகிற கார்கள், இறக்குமதி செய்யப்படுகிற உதிரிபொருட்களை கொண்டு இந்தியாவில் பொருத்தப்படுகிற கார்கள்

* சமையலறை மின்சார சிம்னி

* சைக்கிள்

* பொம்மைகள்

விலை குறையும் பொருட்கள்

* செல்போன்கள்

* டெலிவிஷன் பெட்டிகள்

* செயற்கை வைரம்

* இறால் தீவனம்

விவசாயிகள், பெண்கள் நலன்

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள், முதியோர், பெண்கள் நலன் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் விவசாயிகளுக்கு அடுத்த நிதி ஆண்டில் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. விவசாய ஊக்குவிப்பு நிதியம் தொடங்கப்படுகிறது. சிறுதானியங்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது.

பெண்களுக்கு சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார அதிகாரம் வழங்குவதற்கான நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு வரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

பிற முக்கிய அம்சங்கள்

* 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* நாடு முழுவதும் 30 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

* தேசிய தரவுகள் மேலாண்மை கொள்கை அறிமுகம் செய்யப்படும்.

* பசு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் 500 புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.,

* வருமான வரி படிவம் எளிமையாக்கப்படும்.

இந்த மத்திய பட்ஜெட் பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments