புதுக்கோட்டையில் இருந்து திருச்சி வந்த அரசு பஸ்சில் பச்சிளம் ஆண் குழந்தையை விட்டுச்சென்ற கல்நெஞ்ச தாய் போலீசார் விசாரணை




புதுக்கோட்டையில் இருந்து திருச்சி வந்த அரசு பஸ்சில் பச்சிளம் ஆண் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாய் விட்டுச்சென்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பச்சிளம் ஆண் குழந்தை

புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று வந்தது. அதில் இருந்த அனைத்து பயணிகளும் இறங்கி சென்றுவிட்டனர். டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோரும் சாப்பிட சென்று விட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் பஸ்சை இயக்க அதில் ஏறினர்.

அப்போது பஸ்சின் கடைசி இருக்கையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே கண்டக்டரும், டிரைவரும் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பயணிகள் அமரும் இருக்கையில் கிடந்தது. குழந்தையின் அருகில் பாலுடன் கூடிய பால் பாட்டில், உடைகள் ஆகியவையும் இருந்தன.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதையடுத்து டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் இதுபற்றி புறக்காவல் நிலைய போலீசாரிடம் தெரிவித்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் அவர்கள், குழந்தை பசியில் அழுததால் பாட்டிலில் இருந்த பாலை குழந்தைக்கு கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு வந்த சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஆலோசகர் பிரியா ஆகியோர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக்குழு ஆணையின்படி திருச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அங்கு சிசு வார்டில் இன்குபேட்டரில் வைத்து குழந்தை பாதுகாக்கப்படுகிறது.

கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கண்டோன்மெண்ட் போலீசார், அந்த பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? எதற்காக விட்டுச்சென்றார்? என்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments