புதுக்கோட்டையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு தொடங்கியது




அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 10-வது மாநில மாநாடு புதுக்கோட்டையில் நேற்று ஊர்வலம், பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) ஒரு திருமண மண்டபத்தில் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டையொட்டி புகைப்பட கண்காட்சி திறப்புவிழா நேற்று நடைபெற்றது. கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் திறந்துவைத்தார். அதன்பின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவில் அதிகமான உழைப்பாளிகள் கிராமப்புறத்தில் உள்ளனர். தமிழகத்தில் 1 கோடி பேர் விவசாய கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான அடிப்படை பிரச்சினைகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.

தனி பட்ஜெட்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். ஆனால், தற்பொழுது பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 30 நாட்கள்கூட வேலை கொடுக்கப்படுவதில்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. எந்த மாநிலத்திலும் யாருக்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை. கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கின்ற இவர்களது நடவடிக்கை தீவிரமாக இருப்பதால், இவர்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் உழைப்பாளிகளை திரட்டுவதுதான் எங்களது அடிப்படையான நோக்கமாகும். இந்த திட்டத்திற்கு தமிழகத்திற்கு தனித்துறை வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை சட்டமாக்கினாலும் அதனை முறையாக அமல்படுத்த வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு என தனித்துறையும், தனி பட்ஜெட்டும் தேவைப்படுகிறது.

150 நாட்கள் வேலை

தமிழகத்தில் 150 நாட்கள் வேலை தருவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, பேரூராட்சி பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு பிந்தைய பட்ஜெட்டில் அதற்கென நிதி ஒதுக்கீடு இல்லை. கூடுதல் நிதியை நாங்கள் கேட்கிறோம். தேர்தல் சமயத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தியே கூட்டணி உடன்பாடு செய்யப்படுகிறது. அதன்பிறகு, மக்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதை சுட்டிக்காட்டுவது, விமர்சிப்பது ஜனநாயகக் கடமை. அதைத்தான் நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலம்

இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், மாநில செயலாளர் சின்னதுரை எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாட்டையொட்டி ஊர்வலம் புதுக்கோட்டையில் பால்பண்ணை அருகே தொடங்கி மேல ராஜ வீதி வழியாக சின்னப்பா பூங்காவை வந்தடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments