ராஜஸ்தானில் இருந்து ராணுவ அதிகாரி என்று கூறி கூகுள் பேவில் பெண்ணிடம் 1.60 லட்ச ரூபாய் சுருட்டல்
சென்னை புளியந்தோப்பு சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி (42). இவர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதாக ஓஎல்எக்ஸ் பகுதியில் விளம்பரம் செய்தனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் வளர்மதியை தொடர்புகொண்ட நபர், நான் ராஜஸ்தானில் இருந்து பேசுகிறேன். தனது பெயர் பவானி சிங் என்று தெரிவித்ததுடன் நான் ராணுவ அதிகாரி சென்னைக்கு மாறுதலாகி வர உள்ளதால் ஓஎல்எக்ஸ் இல் உங்களது வீட்டின் விளம்பரத்தை பார்த்தேன். அதில் வாடகைக்கு வர விரும்புகிறேன். எனவே, உங்கள் வீட்டை வீடியோ எடுத்து அனுப்புங்கள் என கூறியுள்ளார். இதன்படி வளர்மதி தனது வீடு முழுவதுமாக வீடியோ எடுத்து அந்த நபருக்கு அனுப்பியுள்ளார்.

இதன்பிறகு அந்த நபர், வீடு தனக்கு பிடித்துவிட்டது என்று கூறியதுடன் கூகுள் பே மூலம் அட்வான்ஸ் அனுப்புவதாக கூறி, முன்னதாக நீங்கள் எனக்கு ஒரு ரூபாய் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து வளர்மதியும் ஒரு ரூபாய் அனுப்பியுள்ளார். இதன்பிறகு பேசிய பவானி சிங், உங்களுக்கு இரண்டு ரூபாய் அனுப்பி உள்ளேன். நான் ராணுவ அதிகாரி என்பதால் ராணுவ சட்டப்படி தங்களது வங்கி கணக்கு விவரங்களை கொடுத்தால்தான் மொத்தமாக தன்னால்  பணத்தை அனுப்பி வைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதன்பிறகு அந்த நபர் ராணுவத்தில் பணிபுரியும் போட்டோ மற்றும் ஆதார் கார்டை அனுப்பி உள்ளார். இதை நம்பிய வளர்மதி தனது வங்கி கணக்கு விவரங்களை போட்டோ எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதன்பிறகு அந்த நபர் ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். அதை தொட்டதும் வளர்மதியின் கூகுள் பே அக்கவுண்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் மற்றும் வங்கி கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் உடனடியாக காணாமபோனது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த வளர்மதி உடனடியாக குறிப்பிட்ட அந்த தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொண்டபோது சுவீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து வளர்மதி கொடுத்த புகாரின்படி, பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குபதிவு செய்து மோசடி செய்த நபரை பற்றி விசாரிக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments