வெளியூர்களில் இருந்து சென்னை வரும் அரசு விரைவு பஸ்களை தாம்பரம் வழியாக இயக்க உத்தரவு பயணிகளின் வசதிக்காக போக்குவரத்துத்துறை நடவடிக்கை




பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அதிக பயணிகள் தினமும் வருகை தருகின்றனர். செங்கல்பட்டு வழியாக வரும் பல ஆம்னி பஸ்கள், தாம்பரம் வழியாக வராமல் அதற்கு முன்பதாக உள்ள மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு செல்கின்றன.

சில அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களும் இந்த வழியை பின்பற்றுகின்றன. எனவே தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனிக்கு போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

சுற்றறிக்கை

இதற்கு தீர்வு காணும் வகையில், அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து கிளை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், திருச்சி, சேலம் மற்றும் நெல்லை கோட்ட மேலாளர்களுக்கு, இந்த கழகத்தின் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் மூலம் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, அனைத்து ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள் அனைத்தும் தாம்பரம் வழியாக (கோயம்பேடுக்கு) இயக்கப்பட வேண்டும்.

அந்த பஸ்களை தாம்பரம் மாநகர பஸ் நிறுத்தத்தில் இருந்து தள்ளி இடது பக்கமாக நிறுத்தி பயணிகளை அங்கு இறக்கிவிட வேண்டும். இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, ஆசர்கானா, வடபழனிக்கு செல்லும் பயணிகள் பயனடைவார்கள். அதோடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்திற்கும் வருவாய் அதிகரிக்கும்.

மாலையில் மட்டும்...

ஆனால், மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பஸ்கள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments