நம்ம புதுக்கோட்டை முந்திரி பருப்புக்கு எப்பவுமே தனி மவுசு!!
பருப்பு வகைகளில் உயர்ந்தது முந்திரி என அழைக்கப்படுவது உண்டு. இந்த முந்திரி பருப்பு உற்பத்தி தமிழகத்தில் பல இடங்களில் இருந்தாலும் புதுக்கோட்டை முந்திரி பருப்புக்கு தனி சிறப்பு தான். புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆதனக்கோட்டை பகுதியில் சாலையோரங்களில் குடிசை தொழிலாக முந்திரி பருப்பு வியாபாரம் செய்து வருவதை பார்க்க முடியும்.

அங்கேயே முந்திரி கொட்டையை தீயில் வறுத்து, அந்த கொட்டையை உடைத்து, அதில் இருந்து முந்திரி பருப்பை தனியாக எடுத்து, அதனை வெயிலில் காய வைத்து, அதன் மேல்பகுதியில் உள்ள தோலை சீவி முழு முந்திரி பருப்பாக சுடச்சுட விற்பனை செய்வார்கள். இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் இந்த முந்திரி பருப்பின் மகத்துவம் அறிந்தவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு முந்திரி பருப்பை வாங்கி செல்வார்கள். இதுதவிர வியாபாரிகளும் மொத்தமாக வாங்கி சென்று கடைகளில் விற்பது உண்டு.

வெளிநாடுகள்

புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு வந்து முந்திரி பருப்பை வாங்கி செல்வார்கள். இதேபோல புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டில் வசித்தாலும், இங்கிருந்து முந்திரி பருப்பை வாங்கி செல்வது உண்டு. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்து மீண்டும் புறப்பட்டு செல்பவர்களும் இங்குள்ள முந்திரி பருப்பை வாங்கி செல்வார்கள். இதனால் புதுக்கோட்டை முந்திரி பருப்பு என்றாலே தனி மவுசு தான்.

இந்த முந்திரி பருப்பு ருசியாக இருப்பதற்கு காரணம் அனைத்து பக்குவங்களும் கைகளால் மேற்கொள்ளப்படுவதாலும், கொட்டையை சட்டியிலிட்டு தீயில் வறுத்து உடைப்பதாலும், அதன் ருசி தனியாக இருப்பதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த முந்திரி பருப்பை சாப்பிட்டவர்கள், இதனை விரும்பி சாப்பிடுகின்றனர். பாக்கெட்டுகளில் ¼ கிலோ, ½ கிலோ, 1 கிலோ என அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

ரகம் வாரியாக பிரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மட்டுமில்லாமல் பிற மாவட்ட வியாபாரிகளும் ஆதனக்கோட்டை முந்திரி பருப்பை மொத்தமாக வாங்கி சென்று கடைகளில் விற்பனை செய்வது உண்டு. இந்த முந்திரி பருப்பை பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்தாலே தனியாக தெரிந்து விடும். முழு பருப்பு மற்றும் உடைத்த முந்திரி பருப்பு, முந்திரி பருப்பு துகள்கள் என ரகம் வாரியாக விற்பனை செய்கின்றனர்.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு குடிசையை அகற்றி மேற்கூரை போன்று அமைக்கவும், தொழிலுக்கு தேவையான கடன் உதவி வழங்கவும், எந்திரங்கள் வாங்கி பயன்படுத்த மானியமும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுகின்றனர். அரசு சார்பில் முந்திரி பருப்பு உற்பத்தி தொழிற்சாலை தனியாக அமைத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், முந்திரி பருப்பு வியாபாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

15 ஆயிரம் ஏக்கர்

புதுக்கோட்டை தோட்டக்கலை துறை துணை இயக்குனர் குருமணி கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் முந்திரி மரங்கள் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி ஆகிய வட்டாரங்களில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முந்திரி பருப்புகளை புதுக்கோட்டை மட்டுமில்லாமல் கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த வியாபாரிகளும் வியாபாரத்திற்காக வாங்கி செல்கின்றனர். அங்குள்ள தனியார் தொழிற்சாலை நிறுவனத்தினரும் மொத்தமாக கொள்முதல் செய்வார்கள். முந்திரி மரங்கள் பெரும்பாலானவை பல ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டவையாகும்.

தற்போது ஒட்டு முந்திரி செடி தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படுகிறது. விருத்தாசலத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான ஆராய்ச்சி நிலையத்தில் முந்திரி செடி பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு அங்கிருந்து செடிகள் உற்பத்தி செய்து தரப்படுகிறது. இதனை வாங்கி வளர்த்து விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. வி.ஆர்.ஐ.-2, வி.ஆர்.ஐ.-3, வி.ஆர்.ஐ.-4, வீரிய ஒட்டு ரகம் என்ற வகையிலான முந்திரி செடிகள் உள்ளது. இந்த செடிகள் 3 ஆண்டுகளில் மரங்களாக மாறிவிடும். மானவாாி பயிராக தான் இந்த முந்திரி செடி உள்ளது. போதுமான தண்ணீர் ஊற்றல் மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் மரமாக வளர்கிறது. மரமாக வளர்ந்த பின் முந்திரி பழம் பழுக்க தொடங்கினால் நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு ஆண்டில் 2 போக மகசூல் கிடைப்பது உண்டு. முந்திரி தோட்டம் அமைத்து விவசாயம் செய்வதில் நல்ல லாபம் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments