காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த சம்பவம்: பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 5 நாட்களுக்கு பிறகு திறப்பு அதிகாரிகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதம்; காலில் விழுந்த ஆசிரியையால் பரபரப்பு




பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவத்தில் 5 நாட்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டது. பெற்றோர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் காலில் விழுந்து வருத்தம் தெரிவித்த ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டது.

விளையாட்டு போட்டிக்கு...

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே பிலிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 83 மாணவ- மாணவிகள் படித்து வந்தனர். இதில் கடந்த 15-ந்தேதி 15 மாணவிகளை மாநில அளவிலான குடியரசு தின விழா விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டம் தோளூர்பட்டி தொட்டியம் வட்டம் கொங்குநாடு பொறியியல் கல்லூரிக்கு வேனில் பள்ளியை சேர்ந்த பொறுப்பாசிரியர்கள் ஜெபசகேயு, திலகவதி ஆகியோர் அழைத்து சென்றனர்.


4 மாணவிகள் சாவு

பின்னர் விளையாட்டு போட்டிகள் முடிந்தவுடன் கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணையை பார்ப்பதற்காக மாணவிகள் வந்துள்ளனர். அப்போது ஆற்றுக்குள் அவர்கள் இறங்கியுள்ளனர். இதில் மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 பேர் தண்ணீரில் சிக்கி இறந்தனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியினை முற்றுகையிட்டனர். இதையடுத்து அன்றிலிருந்து 19-ந் தேதி வரை 5 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

வாக்குவாதம்

இந்தநிலையில் விடுமுறைக்கு பின்னர் பள்ளியானது நேற்று காலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் கோங்கினிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் நல்லுசாமி மற்றும் ஊர் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் இறந்த மாணவிகள் 4 பேருக்கு பள்ளியின் சார்பில், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த இறந்த மாணவி தமிழரசியின் தந்தை ராஜ்குமார் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் இறந்த குழந்தைகளுக்கு பிரேத பரிசோதனை அறிக்கை, இறப்பு சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என கதறி அழுது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


காலில் விழுந்த உதவி தலைமையாசிரியை

அப்போது அங்கிருந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை பரிமளா ராஜ்குமாரின் காலில் விழுந்து பள்ளியின் சார்பில் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் அங்கு வந்திருந்த இறந்த லாவண்யாவின் தாய் பாண்டியம்மாள், சோபியாவின் தாய் லலிதா ஆகியோர் மயக்கமடைந்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்

பின்னர் பெற்றோர்கள், பொதுமக்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இறந்த மாணவிகளுக்கு வருகிற 22-ந்தேதி இறப்புச்சான்று, பிரேத பரிசோதனை அறிக்கை பெற்று வழங்கப்படும். இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர் நலன் காக்கப்படும் என்று உறுதி கூறினார். இதனையடுத்து பெற்றோர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்கள், பெற்றோர்கள் சார்பில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments