சேதுபாவாசத்திரம் பகுதியில், படகுகளை கடலுக்குள் எளிதாக எடுத்துச்செல்ல வசதியாக முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் அகற்றப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு




சேதுபாவாசத்திரம் பகுதியில் படகுகளை கடலுக்குள் எளிதாக எடுத்துச்செல்ல வசதியாக முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் அகற்றப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மீனவர்கள்

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 4,500 நாட்டுப் படகுகள் உள்ளன.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதற்கென அந்தந்த பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன.

மணல் திட்டுகள்

மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்கள் அனைவரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். அன்றாடம் கடலுக்கு சென்று மீன்பிடித்து அதில் வரும் வருமானத்தை வைத்துத்தான் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

அக்னி ஆறு மற்றும் அம்புளியாறு ஆற்றில் இருந்து வரும் நீரோட்டத்தின் காரணமாக அதிக அளவில் மணல் தேங்கி கடலின் முகத்துவாரத்தை அடைத்து விடுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள கடல் முகத்துவாரம் மணல் திட்டுகளாக காட்சி அளிக்கிறது. படகுகளை கடலுக்குள் செலுத்தவும், கடலுக்குள் மீன்பிடிக்க சென்று விட்டு மீண்டும் கரை திரும்பும்போது துறைமுக வாய்க்காலுக்கு படகுகளை எடுத்து வருவதற்கும் மணல் திட்டுகள் தடையாக உள்ளன. இதன் காரணமாக மீனவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

செலவு செய்து...

மாதத்திற்கு 10 நாட்களுக்கு மட்டுமே தொழில் செய்ய வேண்டிய நிலைமை உள்ள நிலையில் மணல் திட்டுகள் மீன்பிடி தொழிலுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதால் மீனவர்கள் வேதனையில் உள்ளனர். வாரத்துக்கு ஒரு முறை கடும் முயற்சியில் உடல் உழைப்போடு அதிகப்படியான தொகை செலவு செய்து இந்த மணல் திட்டுகளை மீனவர்களே அகற்ற வேண்டிய நிலைமை உள்ளது.

இதனால் மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

விரைந்து நடவடிக்கை

மணல் திட்டங்களை அகற்றக்கோரி மீனவர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை இடத்தில் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக சேதுபாவாசத்திரம் பகுதி முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல ஏதுவாக கடல் முகத்துவாரத்தில் மணல் திட்டுக்களை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments