ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் ரயில் பாலத்திற்கு இன்று (24-02-2023) 110வது பிறந்த நாள்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரயில், கப்பல் பாம்பன் கடலை கடந்து செல்ல, 'டபுள் லீப் கேண்ட்லீவர்' கொண்ட பாலம் கட்ட, 1899ல் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் அப்போது கைவிட்டு, 1902ல் பிரிட்டன் அரசு பாலம் கட்ட முறைப்படி அறிவித்தது. கட்டுமான பணி, 1913ல் துவங்கியது. ஜெர்மனி பொறியாளர் ஜெர்சர், பாலம் நடுவில் உள்ள, 218 அடி நீளத்தில் துாக்கு பாலம் அமைக்க டிசைன் கொடுத்ததால் இதற்கு, 'ஜெர்சர்' என, பெயரிட்டனர்.
முதல் பாலம்

கடலில், 2.05 கி.மீ., துாரம், 145 துாண்கள், நடுவில், 218 அடி நீளத்தில் துாக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது. இது அதிகபட்சம், 81 டிகிரி வரை திறந்து மூடும் வகையில் அமைத்து, 1914 பிப்., 24ல் முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது.

இந்தியாவில் கடல் மீது அமைந்த முதல் பாலம் என்ற பெருமை, இப்பாலத்திற்கு ஏற்பட்டது. பின், 1915 முதல் இப்பாலம் வழியாக சென்னை எழும்பூர் முதல் தனுஷ்கோடி வரை, ' போட் மெயில்' எனும் ரயில் இயக்கப்பட்டது.

துவங்கியது

இப்பாலத்திற்கு பிறகே தனுஷ்கோடி, இலங்கை தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவங்கியது. இதன் வாயிலாக பக்தர்கள், சுற்றுலா பயணியர், வணிகர்கள் பலரும் பயனடைந்தனர்.

கடந்த, 1964 டிச., 22ல் தாக்கிய புயல், பாம்பன் பாலத்தை புரட்டி போட்டதில், 124 துாண்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டது. தனுஷ்கோடியில் ரயில் கவிழ்ந்து பலர் உயிரிழந்தனர்.

இதனால் ரயில் போக்குவரத்தை நிறுத்தினாலும், அப்போதைய ரயில்வே செயற் பொறியாளர் ஸ்ரீதரன் தலைமையில் புனரமைப்பு பணிகள் விரைந்து துவக்கி, 67 நாட்களில் பணிகள் முடிந்து, மீண்டும் போக்குவரத்து துவங்கினர்.

இப்புயலுக்கு பின் காற்றின் வேகத்தை அளவிடும் வகையில் நடுப்பாலத்தில் அனிமா மீட்டர் பொருத்தி, 58 கி.மீ.,க்கு மேல் காற்று வீசினால் 'கிரீன் சிக்னல்' காட்டாமல், ரயில் செல்ல தடை விதிக்கப்பட்டது.

பராமரிப்பு

பல இக்கட்டான சூழ்நிலையைக் கடந்த பாம்பன் பாலத்தை, 2005 ஏப்., 30ல், அகலப்படுத்தும் பணி, 24 கோடி ரூபாய் செலவில் துவக்கியதும், போக்குவரத்தை நிறுத்தினர்.

பின், 2007 ஆக., 12ல் பணி முடிந்து மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது. இப்பகுதியில் வீசும் உப்புக் காற்றினால் பாலத்தில் துருப்பிடிப்பதை தடுக்க, இதற்காக ஒரு பொறியாளர், 10க்கு மேலான ஊழியர்களை நியமித்து, தினமும் பாலத்தை பராமரித்து, 3 மாதத்திற்கு ஒருமுறை துாக்கு பாலத்தில் ரசாயன வர்ணம் பூசி ரயில்வே நிர்வாகம் பராமரித்தது.

பிரியாவிடை

நுாறாண்டு கடந்த பாலத்தில் நடுவில் உள்ள துாக்கு பாலம் அடிக்கடி பழுது ஏற்பட்டு பலவீனமானது. இதை சரி செய்து வந்த நிலையில், கடந்தாண்டு நவ., 23ல் மீண்டும் துாக்கு பாலத்தில் உள்ள இரும்பு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டதும், போக்குவரத்தை ரயில்வே முற்றிலும் நிறுத்தியது.

இன்று, 110வது பிறந்த நாள் காணும் இப்பாலம் முற்றிலும் விடை பெறப்போவது மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 109 ஆண்டுகளாக ராமேஸ்வரம் தீவை இணைத்து பல கோடி பயணியரை தாங்கிய சுமை தாங்கியாக பாம்பன் பாலம் விளங்கியது, என மக்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.

நினைவு சின்னமாக மாறுமா?

இத்தீவின் அடையாளம், வரலாற்று சின்னமாக பாம்பன் பாலம் உள்ளது. இதை முற்றிலும் அகற்ற நினைப்பது, ஒரு வரலாற்று சம்பவத்தை அழிப்பது போல் உள்ளது. இது தீவு மக்களுக்கு வேதனை அளிக்கிறது. மத்திய அரசு பாம்பன் பாலத்தை நினைவு சின்னமாக அறிவித்து, சுற்றுலா பயணியர் பாலத்தை கண்டு ரசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments