பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர் ரயில் பாதை பணிகள் தொடங்கப்படுமா.....?
பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில் போக்குவரத்து மிகவும் முக்கிய அங்கம் வகித்து வருகிறது.
சாலைப் போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இதில், ரயில்வே போக்குவரத்து மூலமாக மக்கள் எளிதில் பாதுகாப்பாக குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். கழிப்பறை வசதி மற்றும் வசதியான படுக்கை வசதி இருப்பதால், நோயாளிகள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயணம் செய்ய வசதியாக இருக்கிறது.
அதுபோல சரக்கு போக்குவரத்துகள் குறைந்த செலவில் நீண்ட தூரத்திற்கு அதிக அளவில் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கிறது.
ரயில் போக்குவரத்தினால் சாலை விபத்துகள் குறையவும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும் அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, ரயில் போக்குவரத்தை இந்தியாவில் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் அறிஞர்களும், பொதுமக்களும் விரும்புகிறார்கள்.

பட்டுக்கோட்டையில் இருந்து பாப்பாநாடு - ஒரத்தநாடு - மேல உளூர் வழியாக தஞ்சாவூருக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது அதிராம்பட்டினம், பேராவூரணி, பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, ஒரத்தநாடு பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாகும்.

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இருப்பு பாதை அமைத்திட, கடந்த 1932 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திட்டம் தயாரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் 1946 ஆம் ஆண்டு முதல் முறையாக இதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டது.
மீண்டும் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
கடைசியாக கடந்த 2000 ஆம் ஆண்டில் மீண்டும் ரீ - சர்வே செய்யப்பட்டு, ரூபாய் 101 கோடி மதிப்பீட்டில் மூன்று ஆண்டு காலத்தில் முடிக்குமாறு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, முழு கருத்துரு தென்னக ரயில்வேயிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும் 04. 04. 2000இல் இத்திட்டம் லாபகரமாக இயங்காது என்ற காரணத்தைக் காட்டி தெற்கு ரயில்வே போர்டு அறிக்கையாக அளித்து இத்திட்டத்தை கிடப்பில் போட்டது.
பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், வர்த்தக சங்கம், அரசியல் அமைப்புக்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து 19. 03. 2012 இல் அரியலூர் - தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா. நல்லக்கண்ணு தலைமையில் பட்டுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தின் எதிரொலியாக, ரயில்வே அமைச்சகம் இந்த திட்டத்தை மீண்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள, ஆய்வின் ஆரம்ப கட்ட செலவிற்காக ரூபாய் 7 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது.
தொடர்ந்து 20. 12. 2012 ஆம் தேதி 2013- 14 ரயில்வே பட்ஜெட்டில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை இடையே 47. 2 கிலோ மீட்டர் தூரம் புதிய அகல ரயில் பாதை ரூபாய் 290. 05 கோடியில் செயல்படுத்தப்படும் என்ற ரயில்வே அமைச்சர் அறிவித்தார். 2015 இல் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்படுவதாக தெரியவந்தது.
தொடர்ந்து பல்வேறு டெண்டர்கள் கோரியிருந்தும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படாமல் இன்னும் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் ரயில் பயணிகள் மிகுந்த வருத்தத்துடன் இருக்கிறார்கள். தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டால் தஞ்சை மாவட்டம் முழு வளர்ச்சி பெறும்.
பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, ஒரத்தநாடு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த சுமார் 20 லட்சம் பேர் பயனடைவார்கள்.
மேலும், பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து ஒரத்தநாடு, தஞ்சாவூர், வல்லம், திருச்சிக்கு தினந்தோறும் கல்லூரி , அலுவலகப் பணிகள், வியாபாரம், மருத்துவ சிகிச்சைக்காக என பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள், அலுவலர்கள், வியாபாரிகள், நோயாளிகள், பொதுமக்கள் தினந்தோறும் அதிக அளவில் சென்று வருகிறார்கள். பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சாலையும் பேருந்து போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் போது இந்த சிரமங்கள் இன்றி தஞ்சாவூர், திருச்சி, சேலம், சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளுக்கு எளிதாக சென்று வரலாம்
நெல், அரிசி, தேங்காய், காய்கறிகள், உரம், சிமிண்ட், கட்டுமானப் பொருட்களை எளிதாக சரக்கு போக்குவரத்து ரயில்கள் மூலமாக கொண்டு செல்லலாம்
ஏற்கனவே தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் ரயில் நிலையங்கள் இருக்கின்றன.
புதிதாக பாப்பாநாடு, ஒரத்தநாடு, உளூர் ஆகிய இடங்களில் மட்டும் ரயில் நிலையங்களை அமைக்க வேண்டும்.
எனவே, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரியலூர் - தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதையை விரைவில் அமைத்திட வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் செயலாளர் வ. விவேகானந்தம் ஆகியோர் மத்திய இரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments