திருச்சி அருகே பிறந்த சிலமணி நேரத்தில் குப்பையில் வீசப்பட்ட பெண் குழந்தை போலீசார் விசாரணை
திருச்சி அருகே பிறந்த சில மணிநேரமே ஆன பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பை மேட்டில் கிடந்த குழந்தை

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கல்லகம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கோழிக்கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு கிராமத்தின் கடைசி பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் கோழிக்கடைக்கு வேலைக்கு சென்று இருந்த சுந்தர்ராஜன் மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் கழிவறை அருகே உள்ள குப்பை மேட்டில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது.

ஆரோக்கியத்துடன்...

இதைகண்ட சுந்தர்ராஜன் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து பார்த்தும் அந்த குழந்தை பற்றி தகவல் தெரியாததால் கிராம நிர்வாக அதிகாரி மோகன்ராஜ் மற்றும் கல்லக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கல்லக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.

காப்பகத்தில் ஒப்படைப்பு

இதனையடுத்து அந்த குழந்தை திருச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த பெண் யார்?, கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை வீசி சென்றாரா? அல்லது கல்லகம் கிராமம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் வெளியூரை சேர்ந்தவர்கள் குழந்தையை கடத்தி வரும்போது, போலீசிடம் சிக்கி விடுவோம் என்று பயந்து குழந்தையை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சமீபத்தில் குழந்தை பெற்ற பெண் யாராவது சிகிச்சைக்கு வந்தார்களா?, ேமலும் குழந்தை பெற்ற பெண்கள் விவரங்களை போலீசார் கேட்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த சில மணிநேரமே ஆன குழந்தையை பெண் ஒருவர் குப்பையில் வீசி சென்ற சம்பவம் கல்லகம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments