ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் விபத்தை தடுக்க 10 இடங்களில் ஒளிரும் தகடுகள்!விபத்தை தடுக்கும் வகையில் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஒளிரும் தகடுகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் முக்கிய சாலைகளில் ஒன்றாக ராமநாதபுரம்- ராமேசுவரம் இடைப்பட்ட பகுதி சாலை இருந்து வருகிறது. குறிப்பாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ராமேசுவரம் கோவிலுக்கு கார், பஸ், ஆட்டோ உள்ளிட்ட பல வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் அனைத்து வாகனங்களும் ராமநாதபுரம் வந்து ராமநாதபுரத்தில் இருந்து வழுதூர், நதிப்பாலம் விலக்கு, பெருங்குளம், உச்சிப்புளி, வேதாளை, மண்டபம், பாம்பன் வழியாகவே ராமேசுவரம் வருகின்றன. அதேபோல் இதே பாதை வழியாகவே அனைத்து வாகனங்களும் திரும்பி செல்கின்றன.

இந்தநிலையில் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடைபெறும் தொடர் விபத்தை தடுக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் காவல்துறையின் மூலம் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நடைபெறும் இடங்களில் ஒளிரும் தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்றது.

இந்த பணியானது ராமேசுவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரோஸ்லெட், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் இந்த ஒளிரும் தகடு பொருத்தம் பணியை பார்வையிட்டனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக விபத்து நடைபெறும் இடங்களில் விபத்தை தடுக்கும் விதமாகவும் இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், விபத்து நடைபெறும் இடத்தை அடையாளப்படுத்தி வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காகவும் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் ஒளிரும் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நதிப்பாலம் விலக்கு, நாகாச்சி, புதுமடம் சாலை, உச்சிப்புளி, சாத்தக்கோன் வலசை, மண்டபம் பூங்கா, பாம்பன், ராமேசுவரம் மெய்யம்புளி உள்ளிட்ட 10 இடங்களில் இந்த ஒளிரும் தகடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதுபோல் விபத்தை தடுப்பதற்கு வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதி வேகமாக வருவதை தவிர்த்து மிதமான வேகத்தில் வரவேண்டும். மேலும் இரவு நேரங்களில் மற்ற வாகனங்களை முந்தி செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பனைக்குளம் நதி பாலம் விலக்கு சாலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments