பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயார் செய்தும் கிடப்பில் போடப்பட்ட தஞ்சாவூர் - புதுக்கோட்டை ரெயில் வழித்தடம் மீண்டும் புத்துயிர் பெறுமா!





ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்த பின்னரும் கிடப்பில் போடப்பட்ட தஞ்சை-புதுக்கோட்டை ரெயில் வழித்தடம் மீண்டும் புத்துயிர் பெறுமா? நூற்றாண்டு கால கோரிக்கை நிறைவேறுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தஞ்சை-புதுக்கோட்டை ரெயில் வழித்தடம்
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கு முன்பு முக்கிய வழித்தடமாக இருந்தது மெயின் லைன் எனப்படும் தஞ்சை வழியாக செல்லும் பாதை. நாளடைவில் விழுப்புரம்-திருச்சி இடையேயான ரெயில்பாதை திட்டம் தொடங்கி பயன்பாட்டுக்கு வந்த பின்னர் மெயின் லைன் எனப்படும் தஞ்சை வழியாக இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு விட்டது. தற்போது தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் வெளி மாநிலங்களுக்கும், வெளியூர்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை 62 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சை-புதுக்கோட்டையை இணைக்கும் வகையில் ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை ஏற்கனவே வைக்கப்பட்டு அது நிறைவேறாமல் உள்ளது.

1927-ம் ஆண்டு புதுக்கோட்டை-திருச்சி வழித்தடம் அமைப்பதற்கு முன்னதாகவே தஞ்சை-புதுக்கோட்டை வழித்தடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் 100 ஆண்டுகள் கடந்தும் இந்த கோரிக்கை ஏனோ இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது.

தஞ்சையில் இருந்து புதுக்கோட்டைக்கு ரெயில் தடம் அமைக்க வேண்டும் என இரு மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த 2012-13-ம் ஆண்டில் 65 கி.மீ. தொலைவில் புதிய ரெயில் வழித்தடம் அமைக்க ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பும் வெளியானது.

தொடா்ந்து இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தஞ்சையில் இருந்து கந்தா்வக்கோட்டை வழியாக புதுக்கோட்டையை இணைக்க ரூ.619 கோடியில் திட்ட அறிக்கையை 2016-ல் ரெயில்வே வாரியம் தயாரித்து, மத்திய அரசுக்கு அளித்தது. ஆனால் அதன் பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதனால் நூற்றாண்டுகால கோரிக்கையை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக நிறைவேற்ற மத்திய ரெயில்ேவ வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர், பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் கிரி:-

தஞ்சை-புதுக்கோட்டை இடையே ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை. இதற்கு தஞ்சை மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். மேலும் ஒரு திட்டத்திற்கு ஆய்வு செய்த அறிக்கை தாக்கல் செய்தால் அது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். தஞ்சை-புதுக்கோட்டை ரெயில் வழித்தடத்துக்கான ஆய்வு செய்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதனால் அது பொருந்தாது.

எனவே மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ரெயில் திட்டத்திற்கான பணிகளையும் தொடங்குவதற்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும்.

இந்த திட்டம் நிறைவேறினால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் தூரம் வெகுவாக குறையும். அதே போன்று தென்மாவட்டங்களில் இருந்து ஆன்மிக சுற்றுலா மற்றும் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சையை சேர்ந்த வியாபாரி சிதம்பரம்:-

தஞ்சை-புதுக்கோட்டை ரெயில்பாதை தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள். குறிப்பாக ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு தற்போது திருச்சி சென்று சுற்றித்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்தால் மக்கள் எளிதில் ராமேஸ்வரம் செல்ல முடியும். பயண நேரம் குறையும். அதே போன்று கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பொருட்களை தஞ்சைக்கு கொண்டு வருவதற்கும், தஞ்சையில் இருந்து விவசாயிகள் பொருட்களை புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வதற்கும் ஏதுவாக அமையும்.

இது வியாபாரிகளுக்கும் வரதப்பிரசாதமாக அமையும். இதனால் வர்த்தகமும் பெருகும். மேலும் சுற்றுலா வரும் பயணிகளுக்கும் நேரம் குறையும். சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே தஞ்சை-புதுக்கோட்டை ரெயில் வழித்தடத்தை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகூர், நாகை ரெயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் மோகன்:-

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக தஞ்சை-புதுக்கோட்டை இடையேயான ரெயில் போக்குவரத்து உள்ளது. இந்த வழித்தடத்தில் ரெயில் பாதை இல்லாததால் நாகையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டியுள்ளது. இதனால் தஞ்சையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு திருச்சி வழியாக புதுக்கோட்டைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எவ்வளவு காலம் தான் பஸ்சை நம்பி இருக்க முடியும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதனாலேயே தஞ்சை-புதுக்கோட்டை இடையே புதிய ரெயில்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என நாடாளுமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சியினர் கொடுக்கும் வாக்குறுதி, தற்போது வரை செயல் வடிவம் பெறாமலேயே உள்ளது. மக்களின் கோரிக்கையும் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல உள்ளது. எனவே தமிழக அரசு, தஞ்சை-புதுக்கோட்டை இடையே புதிய ரெயில் பாதை திட்டத்தையும், திருப்பத்தூர்-மேலூர்-மதுரை ரெயில்பாதை திட்டத்தையும் கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாகை மக்கள் திருச்சி, திண்டுக்கல் போகாமல் மிக எளிதாக புதுக்கோட்டை வழியே மதுரைக்கு செல்லலாம். மேலும் எதிர்முனையில் மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சியை சுற்றிக்கொண்டு வராமல் நேரடியாக மதுரை திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை வழியாக, சென்னை செல்லலாம். மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய நாகை மாவட்டத்திற்கு தஞ்சை-புதுக்கோட்டை ரெயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகி விடும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், வழக்கம்போல இதற்கான வாக்குறுதி இடம் பெறும் என்று நினைக்கிறேன். நாகை மக்கள் எதிர்பார்க்கும் திட்டம், தஞ்சை-புதுக்கோட்டை மக்களின் கனவு திட்டம், கானல் நீராக மாறிவிடக்கூடாது.

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன்:-

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமானால் திருச்சி சென்று திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்ல வேண்டும். அவ்வாறு திருச்சி சென்று செல்வதால் பயண நேரம் அதிகரிப்பதோடு பண விரயமும் ஏற்படுகிறது. தஞ்சை-புதுக்கோட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டால் திருச்சி சென்று செல்லக்கூடிய பயண நேரம் குறையும்.

புதுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. தஞ்சை-புதுக்கோட்டை ெரயில் பாதை அமைப்பதால் அந்த பகுதியில் உள்ள அனைத்து இடங்களும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. மேலும் விவசாயம் சார்ந்த பொருட்களை கொண்டு செல்லவும், விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துதலுக்கும் இந்த ெரயில் பாதை முக்கிய வழித்தடமாக அமையும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி : தினத்தந்தி 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments