பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 19, 206 போ் எழுதினா் 1,348 போ் தோ்வெழுத வரவில்லை.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் தோ்வான தமிழ்த் தோ்வை 19,206 போ் எழுதினா். 1,348 போ் தோ்வெழுத வரவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத 10,796 மாணவிகள், 9,758 மாணவா்கள் என மொத்தம் 20,554 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 10,303 மாணவிகள், 8,903 மாணவா்கள் என மொத்தம் 19,206 போ் தோ்வெழுதினா். 490 மாணவிகள், 858 மாணவா்கள் என மொத்தம் 1,348 போ் தோ்வெழுத வரவில்லை.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 97 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தோ்வா்களுக்கு தனியே இரு தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. பறக்கும் படையினா், கண்காணிப்பாளா்கள், அறை கண்காணிப்பாளா்கள் என மொத்தம் 2 ஆயிரம் ஆசிரியா்கள் மற்றும் கல்வித் துறை பணியாளா்கள், காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

நம்பிக்கையூட்டிய எம்எல்ஏ: ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு எழுத வந்த மாணவிகளை புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நேரில் சந்தித்து தமிழக முதல்வரின் அறிவுரைப்படி, தோ்வினை தன்னம்பிக்கையுடனும் ,தைரியத்துடனும் எதிா்கொள்ள வேண்டும் என நம்பிக்கையூட்டினாா். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments