நாகப்பட்டினம் - தூத்துக்குடி இடையிலான சாலை விரிவாக்க பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மும்முரம்
சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்று இ.சி.ஆர். எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படுமா? என்று பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. தலைவர் வைகோ எம்.பி. மற்றும் தி.மு.க. எம்.பி. சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர் மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை இந்த கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படும், என்றார்.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக ரூ.24 ஆயிரத்து 435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளும் நடந்து வருகிறது.


விரிவாக்கத்தின்போது பாலங்கள், இணைப்பு சாலைகள், வாகன சுரங்க பாதைகள் போன்றவை அமைக்கப்படும். இப்பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

விரிவாக்கம் செய்யப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை 697 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இதனை 8 பிரிவுகளாக பிரித்து விரிவாக்கம் செய்து வருகிறார்கள். இதில் புதுச்சேரி முதல் கடலூர் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கிலோ மீட்டர் தூர பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவு பெறும் என தெரிகிறது.


இதுபோல மகாபலிபுரம்-முகையூர் இடையிலான 31 கிலோ மீட்டர் சாலை பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் இந்த சாலை பணி முடியும் என்று தெரிகிறது.

மேலும் பூண்டியாங்குப்பம், சட்டநாதபுரம், நாகப்பட்டினம் இடையிலான 113 கிலோ மீட்டர் தூர பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.

இதுபோல முகையூர்-மரக்காணம் இடையிலான 31 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்-ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையிலான சாலை விரிவாக்க பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மரக்காணம்-புதுச்சேரி இடையிலான 46 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.இச்சாலை விரிவாக்க பணியில் தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி இடையிலான சாலை விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.

சாலை விரிவாக்க பணிகளுக்கு மாநில அரசு தொடர்ந்து நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வந்ததால் இது தொடர்பாக மாநில அரசுடன் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து கொண்டது.

கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து சாலை விரிவாக்க பணிகள் வேகமாக நடப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும் எனவும் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments