கீரமங்கலம் அருகே சேந்தன்குடியில் புதிய பாதையை சீரமைக்கக்கோரி பள்ளி மாணவன் தர்ணா
சேந்தன்குடியில் புதிய பாதையை சீரமைக்கக்கோரி பள்ளி மாணவன் தர்ணாவில் ஈடுபட்டான்.

பள்ளி மாணவன்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் இனியவன்(வயது 9). இவன் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொத்தமங்கலம் அம்புலி ஆறு அணைக்கட்டில் இருந்து பெரியாத்தாள் ஊரணிக்கு தண்ணீர் வரும் அன்னதானக்காவேரி கால்வாய் தூர்வாரப்பட்டது.

இதனால் கால்வாய் கரையின் தென்பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்கு பாதை இல்லாததால், பள்ளி செல்ல முடியவில்லை. எனவே கால்வாய் கரையில் புதிய பாதை அமைத்து தரக்கோரி மனுக்கள் கொடுத்து, குடும்பத்தினருடன் இனியவன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளான்.

தர்ணா

இந்நிலையில் கடந்த மாதம் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இதையடுத்து கால்வாய் கரையில் தற்காலிமாக புதிய பாதை அமைக்கப்பட்டது. இருப்பினும் பாதை முழுமையாக சீரமைக்கப்படாமல், பாதையில் பெரிய குழிகள் உள்ளதால் அதில் செல்ல முடியவில்லை. இதனால் சைக்கிள், வாகனங்கள் செல்லும் வகையில் அந்த பாதையை முழுமையாக சீரமைத்து தரக்கோரி நேற்று இனியவன் பள்ளிக்கு செல்லாமல், கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழைய மரப்பாலத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டான். அவனது சைக்கிள் புத்தகப்பையுடன் கால்வாய்க்குள் விழுந்து கிடந்தது.

இது பற்றி தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியை பூமொழி சம்பவ இடத்திற்கு வந்து, அந்த மாணவனிடம் பேசிவிட்டு சென்றார். மதியம் வரை இனியவன் மரப்பாலத்தில் வெயிலில் குடைபிடித்து அமர்ந்திருந்தான். இது பற்றி தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, விரைவில் பாதை சீரமைக்கப்படும் என்று கூறியதால், போராட்டத்தை இனியவன் கைவிட்டான்.

பள்ளி மாணவனின் தர்ணா போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments