புதுக்கோட்டை ரயில் நிலையம் (PDKT) : நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா? பயணிகள் கருத்து




தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை அடுத்து புதுக்கோட்டையில் உள்ள ரெயில் நிலையம் மிகவும் பழமையானது. இந்த ரெயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டதாகும். புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக வடமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய ரெயில்களில் புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னை-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம், ராமேசுவரம்-புவனேஸ்வர் உள்ளிட்ட ரெயில்களில் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் மூலம் வருவாய் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மட்டுமின்றி மண்டையூர், கீரனூர், வெள்ளனூர், நமணசமுத்திரம், திருமயம், அறந்தாங்கி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த நிைலயில் நீண்டதூர ரெயில்களில் பயணிக்கும் போது பயணிகள் சில சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது. இது குறித்தும், அந்த ரெயில்களில் போதுமான வசதிகள் செய்து தரப்படுகிறதா? என்பது குறித்தும் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

இருக்கைகளில் போதிய இடைவெளி இல்லை

புதுக்கோட்டை வடக்கு 2-ம் வீதியை சேர்ந்த முத்தையா:- நீண்ட தூரம் இயக்கப்படும் ரெயில்களில் உள்ள இருக்கைகளில் முன்னும் பின்னும் போதுமான இடைவெளி இல்லை. ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்கள் எழுந்து வெளியே வர மிகவும் சிரமமாக உள்ளது. அவர்கள் மட்டுமின்றி மற்ற இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களும் எழுந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இதேபோல் ரெயில் பெட்டியில் உள்ள கழிவறைகளை பலர் உபயோகப்படுத்துவதால் கழிவறைகளை அடிக்கடி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம்

புதுக்கோட்டை வடக்கு 4-ம் வீதியை சேர்ந்த குமார்:- மாற்றுத்திறனாளிகள் ரெயில்களில் நீண்ட தூரம் பயணிக்க டிக்கெட் பதிவு செய்யும்போது, சில சமயங்களில் ‘அப்பர் பெர்த்’ அளிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் ரெயிலில் பயணிக்கும்போது, மேலே உள்ள படுக்கைக்கு கம்பிகள் வழியாக ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். எலித்தொல்லை, மூட்டைப் பூச்சி தொல்லையும் உள்ளது.மேலும் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல முக்கிய அம்சங்கள் இல்லை. குறிப்பாக ரெயில் நிலையத்தில் இருந்து தூரத்தில் உள்ள பெட்டிகளுக்கு செல்ல பேட்டரி வாகனம் இல்லை. அதேபோல் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றோரு பிளாட்பாரம் செல்ல எஸ்கலேட்டர் வசதி இல்லை. மேலும் சென்னையில் இருந்து புதுக்கோட்டை வரும் ரெயில்கள் நள்ளிரவில் வருகின்றன. இதனால் வீடுகளுக்கு செல்ல வாகன வசதி இல்லை. மேலும் ரெயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை சற்று மேம்படுத்தலாம்.

போதிய தண்ணீர் நிரப்பப்படுவதில்லை

ஆரியூரை சேர்ந்த முத்துசரவணன்:- அனைத்து ெரயில்வே பிளாட்பாரங்களிலும் குடிநீர் குழாய் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலும் அவற்றில் தண்ணீர் வருவதில்லை. பாட்டில் குடிநீரைத்தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. ரெயில்களிலும் போதுமான அளவுக்கு தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. மேலும் குடிநீரும் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இருப்பதில்லை. ரெயில் நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்லும் ரெயில்களில் பாதி வழியிலேயே தண்ணீர் தீர்ந்துவிடுகிறது. அதற்கு பிறகு காற்றுதான் வருகிறது. எனவே ரெயில்களில் சுகாதாரமான முறையில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நீண்ட தூரம் பயணிக்கும்போது, குடிநீருக்காக சிரமப்படும் நிலை உள்ளது. பிளாட்பாரங்களில் போதிய இருக்கைகள் இல்லை. அதனால் மூட்டை, முடிச்சுகளுடன் பயணிகள் ஆங்காங்கே தரையில் அமர வேண்டியுள்ளது. பயணிகள் குடும்பம், குடும்பமாக தரையில் அமர்ந்திருப்பதும், பலர் அங்கேயே படுத்து தூங்குவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெண்கள் கைக்குழந்தையுடன் சிரமப்படுகின்றனர். தினமும் அதிகமானோர் வரும் ெரயில் நிலையங்களில் கழிப்பிடங்கள் போதுமானதாக இல்லை.

தொல்லை கொடுக்கின்றனர்

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்த ரவி:- நீண்ட தூர ரெயில் பயணம் என்பது பெரும்பாலும் வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடியதாக உள்ளது. அப்படி நீண்ட தூரம் செல்லும்போது வசதியாகவும் செல்ல வேண்டும் என்பதற்காக பல நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்து ரெயிலில் செல்கிறோம். ஆனால் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் டிக்கெட் கூட எடுக்காமல் நாம் முன்பதிவு செய்த இருக்கையில் அமர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். இதனால் நெருக்கடியான நிலையில் அமர்ந்து பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே முன்பதிவு செய்யாமல் பயணம் செய்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் கழிவறை அருகிலேயே அமர்ந்து கொள்வதால், பெண்கள் உள்ளிட்டோர் கழிவறை செல்லும்போது தயக்கமாகவும், சங்கடமாகவும் உள்ளது.

கீரனூரை சேர்ந்த ஜகபர் சாதிக்:- நீண்ட தூர ரெயில்களில் முன்பதிவு செய்து செல்லும் பயணிகளுக்கான இருக்கைகளை, முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற்ற பயணிகள் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றனர். டிக்கெட் பரிசோதர்கள் இதனை கண்டுகொள்வதில்லை. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள ரெயில் நிலைய நடைமேடைகள் நன்றாக உள்ளன. ஆனால் சில ஊர்களில் உள்ள நடைமேடைகள் அசுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது. கீரனூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கீரனூரில் டிக்கெட் முன்பதிவு மையம் திறக்க வேண்டும்.

குறைந்த விலையில் உணவு

அரிமளம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்த வசந்தபாரதி:- நீண்ட தூரம் செல்லும் ரெயில்களில் பெண்களுக்கு என்று தனியாக பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ரெயில் நிலையத்தில் நுழைவு வாயிலில் இருந்து வெகுதூரத்தில்தான் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்கள் தனியாக செல்ல அச்சமாக உள்ளது. எனவே நடைமேடைகளில் கழிப்பிட வசதியை சற்று அதிகப்படுத்தி, தண்ணீர் வசதி ஏற்படுத்தினால் உதவியாக இருக்கும். ரெயில்களில் உணவு கட்டணம் அதிகமாக உள்ளது. அதை தவிர்க்க ரெயில்கள் நின்று செல்லும் சிறிய ரெயில் நிலையங்களில் கூட காலை, மதியம், இரவு உணவு குறைந்த விலையில் கிடைப்பதற்கு வசதி செய்தால் நன்றாக இருக்கும். நீண்ட தூரம் செல்லும் ரெயில்களில் நடைபாதையில் ஆண்கள், பெண்கள் படுத்து உறங்குகின்றனர். இதனால் இரவு நேரங்களில் கழிவறைக்கு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஒரு சிலர் கழிவறை கதவுகளுக்கு முன்பு பெரிய, பெரிய மூட்டைகளை வைத்து அடுக்கி அதில் படுத்துக் கொள்கின்றனர். பெரும்பாலான ரெயில்களில் பெட்டிகளுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் வருவதில்லை. இதனால் முன்பதிவு செய்யாதவர்கள், முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமிக்கும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments