அறந்தாங்கியில் இருந்து கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் தினமும் காலை நேரங்களில் அறந்தாங்கிக்கு சென்று வருகிறார்கள். இதேபோல் பணி முடிந்து மாலை நேரங்களில் அறந்தாங்கியில் இருந்து அவரவர் கிராமங்களுக்கு சென்று வருகிறார்கள். இந்தநிலையில், அறந்தாங்கியிலிருந்து இடையார், புதுவா கோட்டை, வீரமங்கலம், பத்தரசன் கோட்டை, கம்மங்காடு வழியாக செல்லும் பஸ்களில் எப்போதும் கூட்ட நெரிசலாக இருக்கும். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறே செல்கின்றனர். இதனால் அசம்பாவித சம்பவம் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என பஸ்சில் செல்லும் அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அறந்தாங்கி பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் அவ்வப்போது பழுதாகி நடுவழியில் நிற்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கிராமப்புறங்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தினமும் பல இன்னல்களை சந்தித்து அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். ஒருசில டிரைவர்கள் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் சென்று விடுகிறார்கள். மேலும் கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி அறந்தாங்கியில் இருந்து கிராமப்புறங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments