சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி மனு




சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி மனைவி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில், கறம்பக்குடி தாலுகா வாணக்கன்காடு கன்னியான்கொல்லையில் உள்ள வடக்குத்தெருவை சேர்ந்த சண்முகராஜின் மனைவி அஞ்சலை ஒரு மனு அளித்தார். அதில், எனக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். எனது கணவர் சண்முகராஜ் சவுதி அரேபியாவில் உள்ள ஷிகாத் என்ற இடத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ந் தேதி காலை அவர், என்னுடன் போனில் நன்றாக பேசினார்.

ஆனால் அன்று மாலை அவர் தனது அறையில் தூக்குப்போட்டு இறந்துவிட்டதாக, அவரது அறையில் இருந்து அவரது நண்பர்கள் எனக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும் எனது கணவர் சண்முகராஜின் உடல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்ளதாக தெரிவித்தனர். எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் வகையில் எனக்கு பொருளாதார வசதி இல்லை. எனவே எனது கணவரின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

மனுக்கள்

இதேபோல் கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ெமாத்தம் 328 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் வங்கி கடன், அரசு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பெற்றிருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தியும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தெருமுனை பிரசார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வாகனத்தினை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments