ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு வழங்க இலக்கு யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்? சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு






குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டப்படி யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். ஒரு கோடி பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு உரிமைத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்து இருந்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சிகள் இந்த தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பி வந்தன.

பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்த நிலையில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில் இடம் பெறும் என்று ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதுபோல அந்த அறிவிப்பு தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியுடைய பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு வகைகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே இந்த அறிவிப்பு ஒரு பக்கத்தில் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மற்றொரு பக்கத்தில், அதைப் பெற யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்? என்ற கேள்வியை எழுப்பியது. எனவே எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்பை பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தன.

விளக்கம்

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று நடந்த பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று பேசிய சட்டமன்ற பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மகளிர் உரிமைத்தொகை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டுப்பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

இந்த அவையில் மட்டுமல்ல, பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள், விமர்சனங்கள் செய்யப்படுகிறது. பாராட்டியும், புகழ்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அதுதொடர்பாக ஒரு விளக்கத்தை அளிப்பது எனது கடமை. இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் இந்த நூற்றாண்டின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலக பொருளாதார வல்லுநர்கள் அனைவருடைய கவனத்தையும் அது ஈர்த்துள்ளது.

முடங்கிய பெண்கள்

இந்த திட்டத்தால் பயன்பெறும் குடும்பத் தலைவிகளின் தேர்வு குறித்து எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த கருத்திற்கு எனது விளக்கத்தை அளிக்கிறேன். தாய்வழிச் சமூக முறைதான் மனிதகுலத்தை முதலில் வழிநடத்தி வந்திருக்கிறது. பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கத்தாலும் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். அவர்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தின் உழைப்பு நிராகரிக்கப்பட்டது.

பெண் அடிமைத்தனத்தைத் தகர்த்து, அவர்களுக்கான சமூக, பொருளாதார சுதந்திரத்தை மீட்க, 20-ம் நூற்றாண்டினுடைய தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமே வீறுகொண்ட போராட்டங்களின் மூலமாக பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது. நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி, கடந்த ஒரு நூற்றாண்டு காலம் திராவிட இயக்கம் அயராது பணியாற்றியதன் விளைவு, இன்று பள்ளி, கல்லூரி படிப்புகளில் மாணவிகள் அதிகம் நுழைந்துள்ளார்கள். அவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள். அரசு பணியாளர் தேர்வுகளில் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது, தமிழ்ச் சமூகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

கணக்கில் வராத உழைப்பு

ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப் பொருளாதாரத்தை சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள். வேலையிலும், ஊதியத்திலும், சமூக பொறுப்பில் இடைவெளியும், வேறுபாடும் ஒருசில இடத்தில் இருந்தாலும், ஆணின் உழைப்புக்கு எந்தவிதத்திலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்லர். உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும், தன் தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப்பெண்களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது.

ஒரு ஆணின் வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் காக்கவும் இந்த சமூகத்திற்காகவும் வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்து இருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு இருந்தால், இந்நேரம் நம் நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாக பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.

இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்த சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிடும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்த திட்டத்திற்கு மகளிருக்கான உதவித்தொகை என்று இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது.

பரிசோதனை

உலகில் பல நாடுகளில் சோதனை முறையில், ஒரு சில சமூக பிரிவினரிடம் மட்டும் இதுபோன்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. பரிசோதனை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலமாகவே, பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம், வறுமை பாதியாக குறைய வாய்ப்பு உண்டு என்றும், கிடைக்கும் நிதியைப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ செலவு செய்திடவும் முன்னுரிமை தருகிறார்கள் என்றும், சிறு சிறு தொழில்களைச் செய்ய முன்வருகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றுடன் தன்னம்பிக்கை பெற்றுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பரிசோதனை முயற்சியாக உலகில் சில நாடுகளில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன என்றால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்போகும் இந்த மாபெரும் முயற்சி, எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப்போகும் பயன்களை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

யார் யாருக்கு?

இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2 நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.

மகளிரின் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர்; அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர்; கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர்; சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர்; ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள்.

இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் திட்டம் அமைந்திடும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என்று நம்பும் எந்த குடும்பத் தலைவியையும் இந்த அரசு கைவிட்டுவிடாது என்ற உறுதியை அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments