முத்துப்பேட்டையில் மினிலாரி மோதி தலைநசுங்கி வாலிபர் பலி நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
மினிலாரி மோதியதில் தலைநசுங்கி வாலிபர் பலியானார். தப்பிஓடிய மினிலாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றனர்

முத்துப்பேட்டை அரசக்குளத்தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. இவருடைய மகன் அப்துல் ரஹ்மான் (வயது 28). இவர் தான் வாங்கிய புதிய மோட்டார் சைக்கிளை சர்வீஸ் செய்வதற்காக தனது நண்பரான, குண்டாங்குளத் தெருவை சேர்ந்த சேக்தாவுது மகன் செய்யது இப்ராகிம்(27) என்பவருடன் திருத்துறைப்பூண்டி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

ஆலங்காடு பைபாஸ் அருகே சென்றபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற மினிலாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

லாரிமோதி தலைநசுங்கியது

இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்ற அப்துல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிர் இழந்தார். செய்யது இப்ராகிம் படுகாயம் அடைந்து முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மினிலாரி டிரைவர் சம்பவஇடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்த அப்துல் ரஹ்மானின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானவர்கள் அங்கு கூடினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

தப்பிஓடிய டிரைவருக்கு வலைவீச்சு

பலியான அப்துல் ரஹ்மான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மினிலாரியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments