பதிவுசெய்து 10 ஆண்டுகள் ஆனவர்கள் ஆதாரை புதுப்பித்து விட்டீர்களா? ஜூன் 14-ந் தேதி வரை இலவச வாய்ப்பு
இந்திய மக்களின் வாழ்க்கையில் ‘ஆதார்’ என்ற ஒற்றை வார்த்தையை தற்போது யாரும் உச்சரிக்காமல் இருக்க முடியாது என்று சொல்லலாம்.

இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India), என்பது இந்திய நடுவண் அரசின் ஆணைய அமைப்பு ஆகும். இந்த அமைப்பு இந்திய அரசின் ஆட்சிப்பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்குவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.

12 இலக்க எண்

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்துவமாக பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் எண் இந்தியாவில் ஒரு நவீன டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் ஒரே நபர் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரேஷன் அட்டை வைத்திருந்த காலத்தில் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டபோது தமிழகத்தில் எங்கு வசித்தாலும் ஒரே ஒரு ரேஷன் கார்டில் மட்டுமே பெயரை இணைக்க முடியும் என்ற நிலை வந்த போது பல லட்சக்கணக்கான போலி ரேஷன்கார்டுகள் ஒழிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள எண் பெறுவதற்கு (இ.எம்.ஐ.எஸ்.) அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பாக அங்கன்வாடி பள்ளிகளில் அதிக குழந்தைகள் படிப்பதாக கூறி உணவுப்பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஆதார் கட்டாயமாக்கப்பட்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப்பொருட்கள் சேமிக்கப்பட்டது.

இமாலய புரட்சி

காலப்போக்கில் வங்கி கணக்கில் ஆதார் இணைக்கப்பட்டது. வங்கி பணப்பரிவர்த்தனையிலும் ஆதார் ஓர் இமாலய புரட்சி ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும். குறிப்பாக வங்கியில் வரிசையில் மணி கணக்கில் நின்று பணம் எடுத்த காலம் தற்போது இல்லை என்றே சொல்லவேண்டும். ஏ.டி.எம். கார்டு இல்லாமல், வங்கி கணக்கு எண் இல்லாமல் ஆதார் எண், கைரேகை வைத்து பணம் எடுக்கக்கூடிய ஏ.இ.பி.எஸ். எனப்படும் ஆதார் எனேபல் பேமெண்ட் சிஸ்டம் (ஆதார் ஏ.டி.எம்.) என்ற பணப்பரிவர்த்தனை கிராமங்களில் கூட இன்று மிகப்பிரபலமாகி பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

மேலும் வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, மின்இணைப்பு என தற்போது அனைத்திலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெற அனைத்து துறைகளிலும் ஆதார் அடையாள அட்டை மிக அவசியம் என்ற நிலை உருவாகி உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. போலி பயனாளர்களை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் செல்ல ஏதுவாக உள்ளதால் அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதார் இணைப்பு என்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிப்பு

இப்படி ஆதார் மனித வாழ்க்கையில் நாம் அன்றாட அனைத்து பயன்பாட்டிலும், அனைத்து நிகழ்விலும் நம்மோடு ஒன்றிவிட்டநிலையில் ஆதார் எண் பெற்ற ஒவ்வொருவரும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற புதிய தகவலை, இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு கூறியுள்ளது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற தகவல் பொதுமக்களிடையே ஒரு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

பொதுமக்களின் கேள்விகள்

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் பெரும்பாலானோர் சொல்லும் தகவல் இதுதான்..

அதாவது..

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் அல்லது ஆதாரை வைத்து பணம் எடுக்கும் போதும், கைரேகை எடுக்கவில்லை என்று கூறியதால் நாங்கள் ஏற்கனவே பயோமெட்ரிக் அப்டேட் என்று சொல்லக்கூடிய கைரேகை மற்றும் புகைப்படத்தை மாற்றி விட்டோம். புதுப்பித்து விட்டோம். மேலும் செல்போன் எண்ணையும் மாற்றி புதிதாக புதுப்பித்துவிட்டோம் புது ஆதார் அட்டையும் வாங்கிவிட்டோம், அப்புறம் என்ன? என்று பலரும் கூறிவருகின்றனர். மேலும் எந்த தவறும் இல்லாமல் இருக்கும் ஆதாரை திரும்பவும் எப்படி புதுப்பித்தல் செய்வது? என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் தற்போது 3 மாதங்களுக்கு ஆதார் புதுப்பித்தலுக்கு கட்டணம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் ஆதார் சேவை மையங்களை தொடர்பு கொண்டால் 50 ரூபாய் பணம் கேட்கிறார்கள். ஒரே குழப்பமாக உள்ளது என்பதே பலரது சந்தேகமாகவும் உள்ளது.

பயன்பாட்டில் இல்லாத பழைய ஆவணங்கள்

‘ஆதாரை அதில் இணையுங்க.. இதில் இணையுங்க.. அப்படின்னு சொல்லி ஏம்பா இப்படி டார்ச்சர் பண்றீங்க?’ என்பது தற்போது பொதுமக்கள் பலரது புலம்பலாக உள்ளது. நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே ஆதார் எடுக்கும் போது பழைய ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை வைத்துதான் ஆதார் ஆவணங்கள் எடுக்கப்பட்டது. பின்பு எதற்கு ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பது பலரது சந்தேகமாகவும், கேள்வியாகவும் உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பழைய ரேஷன்கார்டுகளை வைத்தும், பழைய டி.என்.என்று தொடங்கக்கூடிய வாக்காளர் அட்டையை வைத்தும் ஆதார் பதிவு செய்யப்பட்டது. டி.என். என்று தொடங்கக்கூடிய வாக்காளர் அட்டை தற்போது செயல் இழந்து புதிய வாக்காளர் எண் வழங்கப்பட்டது என்பது தெரியாமலேயே இன்னும் அந்த அடையாள அட்டையை பலரும் பத்திரமாக வைத்துள்ளார்கள் என்பது தான் இதில் வேடிக்கையான விஷயம்.

அப்போது இருந்த பழைய ரேஷன்கார்டுகள் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றப்பட்டது. டி.என். என்று தொடங்கக்கூடிய வாக்காளர் அட்டை செயலிழந்து அதற்கு மாற்றாக புதிய எண் வழங்கப்பட்டதால் தற்போது ஆதாரில் உள்ள விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ஆவணங்கள் எதுவும் ஆதார் ஆணையத்தில் இல்லை என்பதே உண்மை.

பயன்பாட்டில் இல்லாத பழைய ஆவணங்களால்தான் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு தற்போது புதிய ஆவணங்களை ஆதாரோடு இணைத்து இன்னும் ஆதாரை பலப்படுத்த உள்ளனர் என்பதே உண்மை.

கடைசி நேரம்...

‘‘அட எங்க கிளம்பிட்டீங்க? ஆதாரில் உள்ள விவரங்கள் சரியா இருக்கான்னு பார்த்துட்டு உடனே புதிய தற்போதைய புதிய ஆவணங்களை வைத்து ஆதாரை ‘அப்டேட்’ பண்ண கிளம்பிட்டீங்க போல’’ அனைத்தும் ஆதார் என்ற இந்த சூழ்நிலையில் கவனக்குறைவாக இருந்து விட்டு கடைசி நேரத்தில் நமது ஆதார் செயல்படாமல் நிறுத்தி வைக்கும் சூழலை தவிர்க்க உடனடியாக ஆதாரை புதுப்பித்தல் செய்ய வேண்டியது மிக முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments