புதுக்கோட்டை அருகே தைல மரக்காட்டு பகுதியில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை மீட்பு!புதுக்கோட்டை அருகே தைல மரக்காட்டுப்பகுதியில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தையை மர்மநபர்கள் வீசிச்சென்றனர். அதனை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை அருகே வத்தானக்கோட்டையில் தைல மரக்காட்டு பகுதியில் நேற்று பகலில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் அருகில் சென்று பார்த்த போது அந்த பச்சிளம் குழந்தை பிறந்து சுமார் 15 நாட்கள் இருக்கும் என தெரிந்தது.

அந்த குழந்தை ஆடை அணிவிக்கப்பட்டு, துணியின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை அங்கு நலமாக உள்ளது.

பச்சிளம் பெண் குழந்தை கிடந்த இடம் ஆதனக்கோட்டை- வத்தானக்கோட்டை செல்லும் சாலையாகும். இரக்கம் இல்லாமல் அந்த பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்தவர்கள் வீசி சென்றிருக்கின்றனர்.

குழந்தையை வீசிச்சென்றது யார்? என்பதும், வீசிச்சென்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து உடையாளிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். பச்சிளம் பெண் குழந்தை காட்டுப்பகுதியில் சாலையோரம் வீசப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments