தஞ்சையில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ், லாரி மீது மோதியதில் கண்டக்டர் உள்பட 30 பேர் காயம்




தஞ்சையில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் கண்டக்டர், டிரைவர் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரசு பஸ்

தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு 28 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. தஞ்சையை சேர்ந்த டிரைவர் ஜான்மில்லர் (வயது 51) என்பவர் பஸ்சை ஓட்டிவந்தார். கண்டக்டராக தஞ்சையை சேர்ந்த மணிகண்டன் (49) பணியில் இருந்தார்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டி.வி.எஸ். டோல்கேட் மேம்பாலத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் பஸ் வந்த போது, அரியலூரில் இருந்து சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை அரசு பஸ் டிரைவர் முந்த முயன்றார்.

லாரி மீது மோதல்

அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் இடது பக்கம், லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ் கண்டக்டர் மணிகண்டன், டிரைவர் ஜான் மில்லர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 28 பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

இதில் காயம் அடைந்த 30 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 7 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர்.

23 பேர் சிகிச்சை

கண்டக்டர் உள்ளிட்ட 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த நல்லுசாமி(41) திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments