கோபாலப்பட்டிணம் பகுதியில் பல நாட்களாக தெரு குழாய் தண்ணீர் வராததால் சிரமப்படும் மக்கள்! ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் வலியுறுத்தல்!!கோபாலப்பட்டிணம் பகுதியில் பல நாட்களாக தெரு குழாய் தண்ணீர் வராததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து  ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் சுமார் 5000-க்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இங்கு சில மாதங்களாக தண்ணீர்  பிரச்சனை இருந்து வருகிறது. இங்கு மக்கள் பயன்பாட்டிற்க்கென இரண்டு குளங்கள் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில் சின்னப்பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து ரஹ்மானியா பெண்கள் மதரஸா தெரு பகுதி, கட்டுக்குளம் பள்ளிவாசல் தெரு பகுதி மற்றும் பழைய காலனி தெரு பகுதிக்கு ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வரும் தெரு குழாய் தண்ணீர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வராததால் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மேலும் நோன்பு காலமாக இருப்பதால் வெளியில் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்க்கோ, குளிப்பதற்க்கோ மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மஜீத் அவர்கள் கூறுகையில், 

கோபாலப்பட்டிணம் பகுதியில் பல நாட்களாக தண்ணீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் ஊராட்சி மன்ற தலைவர் சீதலெட்சுமியிடம் தொடர்பு கொண்டு எங்கள் புகார்களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் அவருடைய கணவர் பஷீர் அவர்களின் தலையீடு அதிகமாக இருப்பதால் எங்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை என குற்றசாட்டுகளை முன் வைக்கிறார். மேலும் ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பத்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த மக்கள் கடந்த 1.04.2023 அன்று காலை காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட நிலையில் உடனடியாக மின் மோட்டார் பழுது நீக்கப்பட்டு அன்று மாலையே தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து ஊராட்சி செயலாளர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது கூறியதாவது,

சின்னபள்ளிவாசல் பகுதி அருகே உள்ள ஆழ்குழாய் கிணற்றின் மின் மோட்டார் பழுதானதால் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் மின் மோட்டார் சரி செய்யப்பட்டு வந்துவிட்டது. ஆகையால் நாளை முதல் எப்பொழுதும் போல் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என கூறினார்.

கோபாலப்பாட்டிணத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த புகார் மீது ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments