மாத்தூர் ஊராட்சி தலைவர், துணை தலைவர் அதிகாரம் பறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் சுமார் 200-க்கும் அதிகமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

முறைகேடுகள்
இந்த நிலையில் ஊராட்சியில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது, குடிநீர் குழாய் புதைப்பு, மற்றும் தெரு மின்விளக்கு, ப்ளீச்சிங் பவுடர் வாங்குவது உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
விரிவான விசாரணை
இதனால் ஊராட்சி தலைவர் கோபி மற்றும் துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வார்டு உறுப்பினர்கள் ஆறு பேரும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மனு அளித்திருந்தனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தற்காலிகமாக நிறுத்திவைப்பு
வார்டு உறுப்பினர்கள் அளித்த மனு மீது நடத்தப்பட்ட விசாரணையில் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் கோபி, துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் அதிகாரம் அனைத்தும் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பணபரிவர்தனை
காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மீது வரப்பெற்ற புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு ஊராட்சியின் கணக்குகளை தற்காலிகமாக முடக்கம் செய்து உத்தரவிடுமாறு கோரப்பட்ட பரிந்துரை கடித்தத்தின் அடிப்படையில் தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின் படி பொதுமக்களின் நலன் கருதி நிர்வாக காரணங்களுக்காக மறு உத்தரவு வரும் வரை அனைத்து நிதி கணக்குகளின் பணபரிவர்தனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிடுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பரபரப்பு
மாத்தூர் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வார்டு உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில் மறு உத்தரவு வரும் வரை ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments