முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய தாலுகாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசாணை
வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
கருணாநிதி தலைமையிலான அரசால் கடந்த 28.2.2011 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோட்டத்திலுள்ள மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டங்களை சீரமைத்து முத்துப்பேட்டையை புதிய வருவாய் வட்டம் (தாலுகா) ஆக உருவாக்கி ஆணையிடப்பட்டது.
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
பின்னர், 2013-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்தும் மற்றும் பணியிடங்கள் உருவாக்கியும் ஆணையிடப்பட்டது. ஆனால், இதுநாள்வரை முத்துப்பேட்டை புதிய வருவாய் வட்டம் செயல்படாமல் இருந்தது.
முத்துப்பேட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மன்னார்குடி கோட்டம் மற்றும் வட்டத்திலுள்ள பாலையூர் குறுவட்டத்தில் இருந்து 15 வருவாய் கிராமங்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி வருவாய் வட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை குறுவட்டத்தில் இருந்து 18 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
314-வது வருவாய் வட்டம்
இது, தமிழ்நாட்டின் 314-வது வருவாய் வட்டமாக செயல்பட தொடங்கும்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தைச் சேர்ந்த 33 வருவாய் கிராம மக்கள் தங்கள் வருவாய் துறை சார்ந்த வசதிகளை பெற இதுநாள்வரை மன்னார்குடிக்கும், திருத்துறைப்பூண்டிக்கும் சென்று வந்த நிலையில் தற்போது முத்துப்பேட்டையிலேயே வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் சலுகைகளை பெற வசதியாக அமையும்.
அத்துடன் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் மக்களை விரைவில் சென்று அடைவதற்கு இது ஏதுவாகவும் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அமைந்துள்ளது. இங்கு பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மேலும் தேங்காய் வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து பல மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முத்துப்பேட்டையில் அமைந்துள்ள சதுப்பு நில காடுகள் தனித்தனி தீவுகளாக காட்சி அளிப்பது அதன் மற்றொரு சிறப்பம்சம்.உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் குறிப்பிட்ட காலத்திற்கு இங்கு வந்து தங்கி செல்லும். இங்கு தான் உலக பிரசித்தி பெற்ற முத்துப்பேட்டை தர்கா உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடைக்கோடி பகுதியாக இருந்த முத்துப்பேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதன் படி கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தாலுகா அறிவிப்பை வெளியிட்டார். புதிய தாலுகாவில் கூடுதல் கிராமங்களை சேர்ப்பதற்கான வரைவு பட்டியல் தயாரான நிலையில் பல காரணங்களால் அறிவிப்போடு நின்று விட்டது.
புதிய தாலுகா தொடக்க விழா
இந்த நிலையில் முத்துப்பேட்டை புதிய தாலுகா தொடக்க விழா நடந்தது. புதிய தாலுகாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், வருவாய் அலுவலர் சிதம்பரம், பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் கீர்த்தனா மணி, சங்கீதா, நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகரர், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் என ஏற்கனவே 8 தாலுகா இருக்கின்றன. இப்போது 9-வது தாலுகாவாக முத்துப்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.