ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் பேட்டி




தமிழகத்தில் ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காற்றாலை

புதுப்பிக்கப்பட்ட சூரிய மின் ஆலை அமைச்சகம் மூலம் இந்தியாவில் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை தமிழக கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தை செயல்படுத்த, வ.உ.சி. துறைமுக ஆணையம் செயல்படுத்தும் அமைப்பாக நியமிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகளை டென்மார்க், நார்வேயை சேர்ந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

15 மெகாவாட்

தற்போது நிலப்பகுதியில் நிறுவப்படும் காற்றாலைகள் 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால், கடலுக்குள் நிறுவப்படும் ஒவ்வொரு காற்றாலையும் 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால் காற்றாலையின் இறகுகள் மற்றும் பாகங்கள் அளவில் பெரியதாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருக்கும்.

ஆகையால் இந்த காற்றாலை உதிரி பாகங்களை வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வந்து, இங்கு அதனை இணைத்து கடலுக்குள் எந்த பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று நிறுவப்படும். இந்த காற்றாலை உதிரி பாகங்களை ஒருங்கிணைக்கும் கப்பல் தளத்தை மேம்படுத்துவதற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் ஒரு வருடத்துக்குள் முடிக்கப்படும்.

ஹைட்ரஜன் பூங்கா

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் செலவில் வெளித்துறைமுக திட்டம் பொது, தனியார் கூட்டமைப்பின் கீழ் அமைக்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 16 மீட்டர் மிதவை ஆழத்துடன் 1,000 மீட்டர் நீளத்துடன் கூடிய இரண்டு சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் வருங்காலத்தில் 18 மீட்டர் மிதவை ஆழத்துடன் 22 ஆயிரம் சரக்கு பெட்டகங்களுடன் வரும் கப்பல்களை கையாளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டு உள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும்.

தூத்துக்குடியும், குஜராத்தும் ஹைட்ரஜன் முனையமாக மாற்றப்படும் என்று மத்திய மந்திரி அறிவித்து உள்ளார். அதன்படி வ.உ.சி. துறைமுகத்தில் பச்சை ஹைட்ரஜன் பூங்கா அமைக்கப்பட உள்ளது. பசுமை ஹைட்ரஜன், அமோனியா, மெத்தனால் ஆகியவற்றுக்கான சேமிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த பசுமை ஹைட்ரஜன் பங்கர்கள் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் நிரப்பப்படும்.

பயணிகள் கப்பல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்கு வ.உ.சி. துறைமுகம் தயாராக உள்ளது. இந்த நிலையில் 2 கப்பல் நிறுவனங்கள் தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, கொச்சி வழியாக மீண்டும் தூத்துக்குடிக்கு கப்பலை இயக்குவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளன.

அந்த நிறுவனங்கள் இலங்கையில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன. அங்கு அனுமதி கிடைத்த பிறகு கப்பல் சேவை தொடங்கப்படும்.

பல்நோக்கு சரக்கு முனையம்

வ.உ.சி துறைமுகம் சார்பில் தூத்துக்குடியில் 100 ஏக்கர் பரப்பிலும், கோவையில் 200 ஏக்கர் பரப்பிலும் பல்நோக்கு சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கதிசக்தி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இந்திய உணவுக்கழக குடோன் வரையில் ரூ.200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments