37 கி.மீ. தூரத்திற்கு ரூ.294 கோடியில் அமைக்கப்பட்டது திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே புதிய அகல ரெயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ரெயில் சேவையும் தொடங்கியது




திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.294 கோடியில் அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த பாதையில் ரெயில் சேவையும் தொடங்கியது

திருத்துறைப்பூண்டி -அகஸ்தியம்பள்ளி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தொடங்கி நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி வரையிலான ரெயில்வே வழித்தடம் இந்தியாவில் உள்ள நூற்றாண்டு பழமையான ரெயில் வழித்தடங்களுள் ஒன்றாகும்.

கடந்த 140 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் மீட்டர் கேஜ் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியாகும் உப்பு திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வழியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வர்த்தக ரீதியாக பெரும் பலன்களை மக்களுக்கு அளித்து வந்த இந்த வழித்தடத்தை அகலப்பாதையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

37 கி.மீ. தொலைவு

மொத்தம் 37 கி.மீ. தொலைவுள்ள இந்த வழித்தடத்தில் அகலப்பாதை அமைப்பதற்காக மீட்டர் கேஜ் ரெயில் சேவை 20-1-2005 முதல் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அகலப்பாதை அமைக்கும் பணிகள் 2012-ம் ஆண்டு தொடங்கி கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்தன.

தற்போது ரூ.294 கோடி செலவில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்த வழித்தடத்தில் 79 சிறிய பாலங்களும், 4 ரெயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் கரியாப்பட்டினம், குரவப்புலம், தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய அகல ரெயில் பாதை திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த அகல ரெயில் பாதையில் புதிய ரெயில் சேவையும் நேற்று முதல் இயக்கி வைக்கப்பட்டது. சென்னையில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கொடியசைப்பு

இதையொட்டி திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் செல்வராசு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ்.மணியன், பூண்டி கலைவாணன், மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி நகரசபை தலைவர் கவிதாபாண்டியன், வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் அகஸ்தியம்பள்ளிக்கு புறப்பட்ட ரெயிலுக்கு கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். அந்த ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். கரியாப்பட்டினம், குரவப்புலம், தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அந்தந்த ரெயில் நிலையங்களில் இனிப்பு வழங்கப்பட்டது.

18 ஆண்டுகளுக்கு பிறகு...

18 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியதால் இந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேதாரண்யத்தில் இருந்து உற்பத்தியாகும் உப்பு மற்றும் இந்த பகுதியில் விளையும் மல்லிகை உள்ளிட்ட பூக்கள், காய்கறிகளை பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புவதற்கு இந்த ரெயில் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.








புகைப்படங்கள் உதவி : அப்துல் சமது திருத்துறைப்பூண்டி 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments