திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ரவுண்டானா அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ரவுண்டானா அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

கிழக்கு கடற்கரை சாலை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த கிழக்கு கடற்கரை சாலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மட்டும் நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ராமநாதபுரம், தொண்டி, மீமிசல், கோட்டைப்பட்டினம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டியை கடந்து வேளாங்கண்ணி நாகப்பட்டினம், காரைக்கால், வழியாக சென்னைக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.

புதிய சாலை அமைக்கும் பணி

மேலும் திருத்துறைப்பூண்டி நகரத்திலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணிக்கு செல்லும் வாகனங்கள், பட்டுக்கோட்டைக்கு செல்லும் வாகனங்கள், வேதாரண்யத்துக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலையில் இணைகின்றன. தற்போது புதிதாக நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் சாலைகள் இணையும் இடத்தில் திருவாரூருக்கு இணையும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.

ரவுண்டானா

இதனால் இந்த இடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நான்கு பகுதிகளில் இருந்தும் இங்கு வாகனங்கள் வருவதால் அந்த இடத்தில் ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வாகனங்கள், வெளி மாநில வாகனங்கள், வெளி மாவட்ட வாகனங்கள் மற்றும் வேதாரண்யம் பகுதிகளிலிருந்து உப்பு, மல்லிகை பூ, காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த இடத்தில் இணைவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே விபத்துகளை தடுக்க திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நாகை சாலை இணையும் பகுதியில் ரவுண்டானா அமைத்து சோலார் விளக்குகளை பொருத்தி விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்துகள்

இது குறித்து திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம். ஆர். வி. ராஜேந்திரன் கூறியதாவது:-

திருத்துறைப்பூண்டி நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி ஆகும். திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டைக்கு செல்ல ஏராளமான வாகனங்கள் இந்த மூன்று சாலைகள் இணையும் இடத்தின் வழியாக தான் செல்ல வேண்டும்.

தற்போது இந்த பகுதியில் திருவாரூர் சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. ஏராளமான வாகனங்கள் நான்கு வழி சந்திப்புக்கு வரும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

சோலார் விளக்குகள்

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஜி. கே. கார்த்தி கூறியதாவது:-

திருத்துறைப்பூண்டி நகரத்தை இணைக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலை. வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்கள் ஏராளமாக இந்த இடத்தை கடந்து வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை வேதாரண்யம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்றன.

இதனால் கிழக்கு கடற்கரை சாலை இணையும் இடத்தில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிழக்கு கடற்கரை சாலையில் நாகை சாலை இணையும் பகுதியில் ரவுண்டான அமைத்து சோலார் மின் விளக்குகளை பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments