புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது மீன்களின் விலை உயர வாய்ப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியுள்ளதால் மீன்களின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மீன்பிடி தடைகாலம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகினை கரையில் ஏற்றி அதில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.

மீன்கள் விலை உயரும்

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் விசைப்படகு துறைமுகத்தையொட்டி எண்ணற்ற சிறு, சிறு வியாபாரிகள் உள்ளனர். தடைகாலம் ஆரம்பித்ததால் அவர்களுக்கு வியாபாரம் குறைய தொடங்கி விடும். நாட்டுப் படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வார்கள். இந்த தடை காலத்தில் விசைப்படகு மூலம் இழுவை பயன்படுத்தி மீன் பிடிக்க மட்டும் தடை விதிக்கப்படும். மற்றபடி நாட்டுப்படகு மீனவர்கள் கடல் மேல் வலை விரித்தும், தூண்டில் மூலம் மீன் பிடிக்க எந்தவித தடையும் இல்லை.

அதனால் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குள் மீன் பிடிக்க செல்வார்கள். ஆனால் விசைப்படகு மூலம் கிடைக்கும் மீன்களைப்போல் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காது. இதனால் மீன்கள் வரத்தும் குறைவாக இருப்பதுடன், மீன்களின் விலையும் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments