மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சுற்றுலா படகுசவாரி வனத்துறையினர் தொடங்கி வைத்தனர்




மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலம் வரையிலான கடல் பகுதிக்கு வனத்துறை மூலம் புதிதாக சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது.

சுற்றுலா படகு சவாரி

ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறை மூலம் ஏர்வாடி தர்கா அருகே பிச்சைமூப்பன்வலசை கடற்கரை, உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை, தொண்டி காரங்காடு மற்றும் பாம்பன் குருசடை தீவு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா படகு போக்குவரத்தும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மேலும் ஒரு இடத்தில் புதிதாக சுற்றுலா படகு சவாரி வனத்துறை மூலம் தொடங்கப்பட்டுள்ளது. மண்டபம் காந்திநகர் அருகே உள்ள தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள வனத்துறை புறக்காவல் நிலையத்தில் இருந்து பாம்பன் ரோடு பாலம் அமைந்துள்ள கடல் பகுதி வரை சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில் சுற்றுலா படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா படகு சவாரியை மாவட்ட வன உயிரின அதிகாரி பகான் ஜெகதீஷ் சுதாகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாம்பன் பாலம் வரை

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, சுற்றுலா பயணிகள் வசதிக்காக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மேலும் ஒரு இடத்தில் வனத்துறை மூலம் சுற்றுலா படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள வனத்துறை புறக்காவல் நிலையத்திலிருந்து பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதி வரையிலான கடல் வரையிலும் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று திரும்பி வரும் வகையில் இந்த படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 20 பேர் அமர்ந்து செல்லும் வகையில் புதிதாக பைபர் படகு ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது.

படகில் பயணம் செய்ய வரும் சுற்றுலா பயணிகள் ஏறி, இறங்க வசதியாக புறக்காவல் நிலையம் எதிரே புதிதாக பனைமரத்தால் ஆன படகு நிறுத்தும் தளமும் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு புதிய படகு வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படகு சவாரிக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து நடைமுறை செய்யப்பட்டு வருகின்றன. ஓரிரு நாளில் இது குறித்து தெரிவிக்கப்படும் என்றனர்.

குறைந்த கட்டணம் வேண்டும்

ஏற்கனவே பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குரு சடை தீவு வரையிலும் வனத்துறை மூலம் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா படகு போக்குவரத்திற்கு நபர் ஒருவருக்கு ரூ.300 வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதுவே அதிக கட்டணம் என்பதால் பல சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து செய்யாமல் திரும்பி செல்கின்றனர்.

எனவே மண்டபத்திலிருந்து பாம்பன் வரையிலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள படகு சவாரிக்கு வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments