திருச்சி வழியாக KSR பெங்களூர் - வேளாங்கண்ணி இடையே வாரந்திர சிறப்பு ரயில் இயக்கம்
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி மாதா கோயில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்திற்கு, கிறிஸ்தவர்கள் மட்டும் இன்றி இந்துக்களும் அதிக அளவில் வந்து வழிபாடு செய்து வருகிறார்கள். வேளாங்கண்ணி மாதா கிறிஸ்தவ ஆலயத்திற்கு தமிழகம் மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

மேலும்,நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதால், ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்குகிறது. இதனால் நாகை மாவட்டத்திற்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். பெங்களூரு மார்க்கமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணிக்கு வந்து செல்கின்றனர்.

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதாலும், பள்ளி கல்லூரிகள் தேர்வுகள் முடிந்து விட்டதாலும், பக்தர்கள் அதிக அளவில் குடும்பத்துடன் வந்து மாதாவை தரிசிப்பார்கள். மேலும் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.இதன் காரணமாக பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, பெங்களூரு – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் பெங்களூர் கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் இருந்து சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளது.

வருகிற மே மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 7:50 மணிக்கு பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் அன்று இரவு 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறு மார்க்கமாக சனிக்கிழமை இரவு 11:55 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:45 மணிக்கு பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் சென்றடையும்.

ரயில் எண். 06547 பெங்களூரு - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் முதல் பயணமாக நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வருகிற மே மாதம் 6-ந் தேதி சனிக்கிழமை மதியம் 12:49 மணிக்கு வந்து 12:50 மணிக்கு வேளாங்கண்ணிக்கு புறப்படும். ரயில் எண் 06548 வேளாங்கண்ணி - பெங்களூரு சிறப்பு ரயில் மறு மார்க்கத்தில், நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வருகிற மே மாதம் 7ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:09 மணிக்கு வந்து 5:10 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு செல்லும்.

இந்த ரயில் ஏற்கனவே ஈரோடு வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வருகிற மே மாதம் முதல் இந்த ரயில் நாமக்கல் வழியாக இயக்கப்பட உள்ளது.
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments