புதுக்கோட்டை மாவட்டத்தில் 96 கிமீ தொலைவுக்கு ரூ. 2.69 கோடியில் ஆறுகள் தூா்வாரும் பணிகள்!


புதுக்கோட்டை மாவட்டத்தில் 96 கிமீ தொலைவுக்கு ரூ. 2.69 கோடியில் ஆறுகள் தூா்வாரும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாய், தெற்கு வெள்ளாறு மற்றும் அக்னியாறு ஆகியவற்றில் 96 கிமீ தொலைவுக்கு ரூ. 2.69 கோடியில் தூா்வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

அதிகமாக தெரிவிக்கப்படும் பட்டா மாறுதல் பிரச்னை, உரக்கடைகளில் தேவையற்ற உரங்கள் வாங்க வற்புறுத்துவது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றாா் கவிதா ராமு.

முன்னதாக கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசியது:

தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லதுரை:

பண்ருட்டி பலாவுக்கு புவிசாா் குறியீடு கிடைத்திருக்கிறது. நமது ஆலங்குடி பகுதியில் விளையும் பலா கூடுதல் மகசூல் மற்றும் ருசி கொண்டது. இதற்கும் புவிசாா் குறியீடு பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிப்புக்கூட்டும் நடவடிக்கைகளையும் வேளாண் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

தைல மரங்களை அகற்ற காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறுங்காடுகள் அமைக்கவும், தடுப்பணைகள் அமைக்கவும் தீவிர நடவடிக்கை தேவை.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்:

மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களில் மண்டிக்கிடக்கும் வேலிக்கருவை முள் மரங்களை அகற்ற வேண்டும். விவசாயத்தை அழித்து வரும் தைலமரக்காடுகளை அகற்ற வேண்டும்.

புதிதாக தைல மரங்கள் நடக் கூடாது. ஏற்கெனவே உள்ள மரங்களை படிப்படியாக அகற்ற வேண்டும். பருவமழைக்கு முன்பு ஏரி, குளங்களையும் பாசன வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரா் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவா் டி. ரமேஷ்:

குளங்களில் வண்டல் மண் அள்ளுவதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். களக்குடி ஏரியில் தைலமரங்களை அகற்ற வேண்டும்.

விவசாயி ஆரோக்கியசாமி: நாட்டின் விடுதலைக்காக நெடிய போராட்டத்தை நடத்தியதைப் போல, தைல மரங்களை அகற்றவும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் போல என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, கூட்டுறவு இணைப் பதிவாளா் கோ. ராஜேந்திரபிரசாத், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments