புதுக்கோட்டையில் விபத்தில் வாலிபர் மயக்கம்: மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.4 லட்சத்தை மீட்டு ஒப்படைத்த போலீஸ்காரர்!புதுக்கோட்டையில் விபத்தில் வாலிபர் மயக்கமடைந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.4 லட்சத்தை மீட்டு ஒப்படைத்த போலீஸ்காரரை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பாராட்டினார்.

புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள் விபத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காயமடைந்து கீழே மயங்கி கிடந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் மகாராஜா இதனை கண்டார். அவர் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்.

மேலும் கீழே கிடந்த அவரது மோட்டார் சைக்கிளை மீட்டு சோதனையிட்ட போது அதில் டேங் கவரில் மஞ்சப்பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இந்த பணத்தை கண்டதும் அவர் உடனடியாக டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தார். காயமடைந்தவர் மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக அவரது பெயர் விவரம் பற்றி தெரியவில்லை.

இதையடுத்து அந்த பணத்தை போலீசார் எண்ணிய போது அதில் ரூ.4 லட்சம் இருந்தது. இதனை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக போலீசார் வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் விபத்தில் காயமடைந்தவர் புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 35) என்பதும், அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சமீபத்தில் சொந்த ஊர் திரும்பியதும் தெரியவந்தது.

மேலும் மகேஸ்வரன் புதிதாக வீடு கட்டி வருவதாகவும், அது தொடர்பாக பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து மகேஸ்வரனின் மனைவி ரத்னா தேவியை புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று மாலை வரவழைத்தனர். அவரது கணவருக்கு சொந்தமான ரூ.4 லட்சத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் முன்னிலையில் பணத்தை மீட்ட போலீஸ்காரர் மகாராஜா ஒப்படைத்தார். அப்போது அவரை டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பாராட்டினார்.

அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமல், பணியில் நேர்மை தவறாமல் செயல்பட்டு மீட்கப்பட்ட ரூ.4 லட்சத்தை உரியவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைந்த போலீஸ்காரரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி, டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சக போலீசார் பாராட்டினர். கணவர் கொண்டு சென்ற ரூ.4 லட்சத்தை போலீஸ்காரரின் உதவியால் கிடைத்ததை எண்ணி ரத்னா தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
போலீஸ்காரர் மகாராஜாவின் செயல் காவல்துறைக்கு பெருமையையும், பெரும் பாராட்டுகளையும் சோ்த்துள்ளது. பணியில் இருந்த அவரது செயலை பார்க்கும் போது மனிதநேயம் இன்னும் மரித்து போகவில்லை என்பது ஏதோ ஒரு வடிவில் நிரூபணமாகி கொண்டிருக்கிறது. காயமடைந்த மகேஸ்வரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments