பொன்னமராவதி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி நாற்றுநடும் போராட்டம்




பொன்னமராவதி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டும், குழியுமான சாலை

பொன்னமராவதி தாலுகா கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும், இரவு நேரங்களில் அந்த வழியாக புதிதாக ெசல்லும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள்.

எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நாற்றுநடும் போராட்டம்

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி அப்பகுதியில் மழைநீரில் தேங்கியுள்ள சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பழுதடைந்த சாலையால் கடந்த 10 ஆண்டுகளாக அவதியடைந்து வந்தோம்.

இதையடுத்து, அமைச்சர் ரகுபதி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது தொகுதி நிதியில் இருந்து சாலையை சீரமைக்க நிதியை ஒதுக்கினார். ஆனால் இதுவரை சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments