புதுக்கோட்டை மாவட்டத்தில் விசைப்படகுகளை 19-ந் தேதி அதிகாரிகள் ஆய்வு




புதுக்கோட்டை மாவட்டத்தில் விசைப்படகுகளை 19-ந் தேதி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும், கிழக்கு கடலோர பகுதியில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜுன்) 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகள் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகிறது. படகின் உறுதித்தன்மை, எந்திரத்தின் குதிரைதிறன் அளவு, படகின் நீள, அகலம் ஆகியவை பதிவு சான்றுடன் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் மானிய விலையிலான டீசல் மற்றும் இதர மானியத்திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

19-ந் தேதி ஆய்வு

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளை மீன்வளம் மற்றும் மீனவளத்துறை அதிகாரிகள் வருகிற 19-ந் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் போது மீனவர்கள் தங்கள் மீன்பிடி விசைப்படகினை தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்திட வேண்டும். நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். விசைப்படகுகள் ஆய்வின் போது காண்பிக்கப்படாத படகுகளுக்கு விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் நிறுத்தம் செய்யப்படுவதுடன் அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாக கருதி அப்படகுகளின் பதிவு சான்றினை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நேரடி ஆய்வின்போது காண்பிக்கப்படாத, பதிவு செய்யப்படாத படகுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரி விலக்களிக்கப்பட்ட டீசல் பாஸ்புத்தகம் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்து, அனைத்து விவரங்களையும் அளித்திட வேண்டும். ஆய்வு செய்யப்படவுள்ள நாளில் படகு உரிமையாளர் அல்லது அவரின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் விசைப்படகில் ஆய்வுக்குழு ஆய்விற்கு உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும். படகின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், படகின் காப்புறுதி சான்று ஆகியவைகளின் அசல் ஆவணங்களுடன் அவற்றின் ஜெராக்ஸ் நகல்கள், அப்படகின் பதிவெண் தெளிவாக தெரியும் வண்ணம் 2 புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தி அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

கடற்பாதுகாப்பு உபகரணங்கள்

விசைப்படகில் உள்ள கடற்பாதுகாப்பு உபகரணங்கள், தொலைதொடர்பு கருவிகள் போன்றவற்றின் விவரங்களை ஆய்வு படிவத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் துறை மூலம் முழு மானிய உதவியில் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகளை ஆய்வுக்கு காண்பிக்கப்பட வேண்டும். படகு கட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் தொழிலில் ஈடுபட்டு வரும் படகுகளை தீவிரமாக ஆய்வு செய்து அப்படகுகள் கடலில் செலுத்த தகுதி உள்ளனவா? என்பதை படகினை இயக்கி பார்த்து படகு மீன்பிடிக்க அனுமதிக்கப்படும்.

ஆய்வுக்குட்படுத்தப்படாத மீன்பிடி விசைப்படகுகளுக்கான மானிய டீசல் நிறுத்தம் செய்யப்படுவதுடன் படகு உரிமையாளர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments