கரைகளை பலப்படுத்த வேண்டும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் நாகுடி கல்லணை கால்வாய் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு




நாகுடி பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் கரைகளை பலப்படுத்தி, கரையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கல்லணை கால்வாய்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகுடி ஊராட்சியில் கல்லணை கால்வாய் 1936-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லணை கால்வாய் நாகுடி ஊராட்சியில் கிழக்கு மற்றும் தெற்கு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அத்தாணி வழியாக கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக உள்ள கட்டுமாவடிக்கும், தெற்கு நோக்கி செல்லும் கல்லணை கால்வாய் மும்பாலை கிராமம் வரை செல்லக்கூடியது. இந்த கால்வாய் காவிரி ஆற்றின் கிளை கால்வாய் ஆகும்.

கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

இந்த கால்வாயில் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். கோடை காலங்களில் வறண்டு காணப்படும். இந்த கால்வாயில் 25 கிலோ மீட்டர் தூரம் வரை சுத்தம் செய்து ஆழப்படுத்தி இரு கரைகளையும் கட்டி செம்மைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. அதற்காக அரசு நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வேலை நடைபெறவில்லை. ஆற்றின் மேல் கரையை சரியாக மண் போட்டு அணைக்காமலும், கரையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை சரிவர அகற்றாமலும், கால்வாயை முறையாக ஆழப்படுத்தாமலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை கட்டாமலும் காணப்படுகிறது.

கோரிக்கை

இந்த கால்வாய் மூலம் பயன்பெறும் கிராமங்களான கீழ்குடி, காராவயல், ஏகணிவயல் பெரிய ஏரி, தேடாக்கி, புறங்காடு, பூனையங்குண்டு, சந்தமனை, ச.தென்பாதி, திருவங்கூர், கண்டிச்சங்காடு, ஏகப்பெருமாளூர், நெமிலி காடு, திருவாப்பாடி, அத்தாணி, கருப்பட்டி காடு வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் சரிவர பணிகள் நடைபெறவில்லை.

இந்த கல்லணை கால்வாய் பல வருடங்களாகியும் இன்னும் சரிவர தூர்வாரப்படவில்லை. கால்வாயில் இருபுறமும் கரைகளை வலுப்படுத்தியும், கரையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்றியும், கால்வாயை அழப்படுத்தி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கல்லணை கால்வாய் பாசனத்தாரர், கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தூர்வார முன்வரவில்லை

அறந்தாங்கி பகுதியை சேர்ந்த அத்தாணி ராமசாமி:- கல்லணை கால்வாயை பொறுத்தமட்டில் அரசு அதிகாரிகள் தூர்வார முன்வராதது காரணம் என்ன என்று ெதரியவில்லை. கால்வாயில் மேடான பகுதிகள் உள்ளது. மேலும் நடுவில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து உள்ளது. அதை கூட அதிகாரிகள் அப்புறப்படுத்தவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த வேலையும் நடக்கவில்லை. 2 ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் ஒன்று திரண்டு பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாயை தூர்வாரினோம். அது போன்ற நிலை இல்லாமல் கால்வாயை உடனடியாக தூர்வாரி தர வேண்டும்.

தூர்வார வேண்டும்

கல்லணை கால்வாய் பாசனத்தாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ்:- இந்த ஆண்டு கோடைகாலம் ஆரம்பித்து 2 மாதம் ஆகின்ற நிலையில் இதுவரையில் எங்கள் கடைமடை பகுதியில் எந்த ஒரு கால்வாயிலும் தூர்வார வில்லை. உடைக்கப்பட்டிருந்த எந்த இடங்களையும் சரிசெய்ய வில்லை. இன்னும் 2 மாத காலத்தில் தண்ணீர் திறக்கின்ற சூழ்நிலை உருவாகும். இதனால் உடனடியாக அனைத்து கிளை கால்வாய்களையும் தூர்வார வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

புறங்காடு கிராமத்தை சேர்ந்த பாக்கியம்:- கல்லணை கால்வாய் நாகுடி ஊராட்சியில் இருந்து கிழக்கு நோக்கி 5 ஊராட்சியை கடந்து வருகிறது. இந்த கல்லணை கால்வாயில் காவிரி தண்ணீர் திறந்து விடும் நிலையில், இந்த கால்வாய் வழியாகத்தான் ஏரி, குளங்கள் நிரம்பி வயல்களில் விவசாயம் செய்ய முடியும். இந்த சூழ்நிலையில் கால்வாயில் படர்ந்து மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்றி தூர்வாராமல் அதிகாரிகள் மெத்தன போக்கில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து முறையிட்டும் அதிகாரிகள் அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த சூழ்நிலை நீடித்தால் விவசாயம் பொய்த்து விடும் நிலைக்கு தள்ளப்படும். எனவே இந்த பாசன கால்வாயை தூர்வாரி இருபுறமும் சிமெண்டால் ஆன கரையை கட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments