மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்க நடவடிக்கை 20-ந் தேதி அதிகாரிகள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற 20-ந் தேதி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

நாட்டுப்படகுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதி சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது. கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் உள்பட ஏனாதி வரை 32 கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகு, விசைப்படகுகளில் கடலில் மீன் பிடிக்க சென்று வருவது வழக்கம். மீன்பிடி தொழிலே முக்கியமாக விளங்கி வருகிற நிலையில், கடல் பாசி வளர்ப்பிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் வழங்கப்படுவதை போல நாட்டுப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாட்டுப்படகில் முறையாக பதிவு பெற்று, பராமரித்து வருகிற மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படுவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதேபோல மற்ற மீனவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கையாகும்.

20-ந் தேதி ஆய்வு

இந்த நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் அனைவருக்கும் டீசல் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாட்டுப்படகு மீனவர்களுக்கு மாதம் ஒரு முறைக்கு 300 லிட்டர் டீசல் மானியம் வழங்கப்படும்.

இதில் மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவிலான மீனவர்கள் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளது. இதனை வருகிற 20-ந் தேதி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நாட்டுப்படகுகளின் பதிவு, பராமரிப்பு, உரிமையாளர்கள் விவரம் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வினால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்க ஏதுவாக அமையும்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments