மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: மணமேல்குடி, கட்டுமாவடி,மீமிசல் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் மணமேல்குடி, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

நாட்டுப்படகு மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது.

மீன்கள் விலை உயர்வு

இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலில் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மணமேல்குடி, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை அதிகமாக உயர்ந்துள்ளது.

செங்கனி, பாறை மீன், முரல் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட அனைத்து மீன் வகைகளும் வழக்கத்தை விட கிலோவிற்கு ரூ.100 முதல் ரூ.150 வரையும் விலை ஏற்றமாக உள்ளது. இதனால் மீன் பிரியர்கள் மீன் விலை ஏற்றமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கொண்டு வந்த பணத்திற்கு குறைந்த அளவு மீன்களை வாங்கி சென்றனர். மேலும் வெளியூர் வியாபாரிகளும் அதிகமாக வருவது கிடையாது. விசைப்படகு தடைக்காலம் முடிந்த பின்னர் தான் மீன்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments