‘நமக்கு நாமே' திட்டப்பணிக்கான பொதுமக்களின் பங்களிப்பு தொகை குறைப்பு




பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ‘நமக்கு நாமே' திட்டப்பணிகளுக்கான பொதுமக்களின் பங்களிப்பு தொகையை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

‘நமக்கு நாமே’ திட்டம்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை சீரமைத்தல், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை அமைத்தல், மேம்பாடு செய்தல் மற்றும் சீரமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், மரங்கள் நடுதல், பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர்நிலை புனரமைப்பு பணிகள் தவிர்த்து மற்ற பணிகளுக்கு பொதுமக்களின் குறைந்தபட்ச பங்களிப்பானது, பணி மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.

சட்டமன்றத்தில் அறிவிப்பு

நீர்நிலை சீரமைப்பு பணிகளுக்கு பொதுமக்களின் குறைந்தபட்ச பங்களிப்பானது, பணி மதிப்பீட்டு தொகையில் 50 சதவீதம் ஆகும். பொதுமக்கள் பங்களிப்பிற்கு உச்சவரம்பு ஏதும் இல்லை.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில், மொத்தம் ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பொதுமக்களின் பங்களிப்பு தொகை ரூ.151.77 கோடி ஆகும். கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 2,568 பணிகள் எடுக்கப்பட்டு, 1,446 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

இந்த நிலையில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களுடைய பங்கு என்பதை பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு என விதிகள் தளர்த்தப்படும் என கடந்த 7.1.2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

உட்கட்டமைப்பு வசதி

இதன்படி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குறிப்பிட்ட பகுதியின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக பட்டியலின மற்றும் பழங்குடியினரை கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பணிக்கும், பொதுமக்களின் குறைந்தபட்ச பங்களிப்பு தொகையினை, பணி மதிப்பீட்டுத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20 சதவீதம் என்ற அளவிற்கு குறைத்து ஆணையிடப்படுகிறது.

இந்த நடவடிக்கை, பட்டியலின மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அதிகளவிலான பொதுமக்களின் பங்கேற்பினை ஊக்குவித்து, இந்த பகுதிகளுக்கு அதிகளவில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதுவாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments