புதுக்கோட்டை அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் மனைவியின் சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கொழுந்தன் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டை அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் மனைவியின் சகோதரி வீட்டில் கொழுந்தன் பெட்ரோல் குண்டு வீசினார். மேலும் அவர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே கருக்காக்குறிச்சி தெற்கு தெரு ஊராட்சியை சேர்ந்தவர் கவிதா (வயது 40). இவரது சகோதரியின் கணவர் பாலசேகர் (55). இவர், திருச்சி ஏர்போர்ட் பகுதியில் வசித்து வருகிறார். கவிதாவிற்கு, பாலசேகர் புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் துணிக்கடை தொடங்க பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலசேகர் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி தருமாறு கவிதாவிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்நிலையில், திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு பாலசேகர் மற்றும் அவருடன் 2 பேர் சேர்ந்து காரில் கருக்காக்குறிச்சியில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை கவிதாவின் வீட்டில் வீசினர். அப்போது கவிதா வீட்டில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், கவிதாவின் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

துப்பாக்கியால் சுட்டார்

அப்போது பாலசேகருக்கும், கவிதாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே பாலசேகர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கவிதாவை நோக்கி சுட்டுள்ளார். இதைப்பார்த்த பக்கத்து வீட்டை ேசர்ந்த பெண் ஒருவர் பாலசேகரை தடுத்துள்ளார்.

இதனால் துப்பாக்கியில் இருந்து சென்ற குண்டு திசை மாறி அருகில் இருந்த வாகனத்தின் மீது பட்டதால் கவிதா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து பாலசேகர் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

கைது

இதுகுறித்து கவிதா வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசேகரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் அவரது காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் வந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதையடுத்து போலீசார் பாலசேகரை ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments