புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணியிட மாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு




புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணியிட மாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்து கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அரசு பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் கூடி பள்ளி வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பள்ளியின் தலைமை ஆசிரிைய, உதவி ஆசிரியை ஆகியோரது செயல்பாடுகளால் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது தெரிந்தது.

மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் மாற்றுச்சான்றிதழை வாங்கி வேறு பள்ளிக்கு செல்லவும் முடிவு செய்துள்ளதால் பள்ளியில் அடுத்த கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை குறையும். இதனை தடுக்கும் வகையில் பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை உள்பட 2 பேரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் பள்ளி மீண்டும் திறக்கும் நாளில் முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

மாற்ற கோரிக்கை

இந்த நிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று மனுவாக பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் அந்த 2 பேரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தினர்.

அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணியிட மாற்றம் செய்ய கோரி ஊர் பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கண்ட 2 பேரின் நடவடிக்கை, செயல்பாடுகள் சரியில்லை எனவும், அதனால் மற்ற ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் தான் 2 பேரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்துவதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சுவற்றில் எழுதப்பட்ட வாசகம்

இதற்கிடையில் பள்ளியின் சுவற்றில், இந்த பள்ளி சண்டை பயிற்சி பள்ளியாக மாற்றப்பட்டது. 2023-2024-ம் ஆண்டுக்கான வீரர், வீராங்கனைகள் சேர்க்கை நடைபெற உள்ளது. நிர்வாகம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments