கள்ளச்சாராய பலி சம்பவம் எதிரொலி: புதுக்கோட்டையில் போலீசார் அதிரடி சோதனை 360 லிட்டர் சாராய ஊறல்கள் பறிமுதல்; 58 வழக்குகள் பதிவு




கள்ளச்சாராயம் குடித்ததால் பலியான சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 360 லிட்டர் சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிரடி சோதனை

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 7 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலி சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை தடுக்கவும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்கவும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் போலீசார் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், தனிப்படை போலீசார் என அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

சாராய ஊறல்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்களில் சாராய ஊறல்கள் 360 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததில் மதுபாட்டில்கள் மொத்தம் 85 லிட்டர் அளவு கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இதில் மொத்தம் 58 வழக்குகள் பதிவு செய்ததில் 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆலங்குடி மதுவிலக்கு போலீசாரால் நேற்று அழகன்விடுதியில் அஜித்குமாரை (வயது 27) கைது செய்ததில் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

செல்போன் எண்களில் புகார் தெரிவிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராய விற்பனை மற்றும் ஊறல் போடுதல், மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தல் உள்ளிட்டவை குறித்து செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 94981 11155, 94454 63494 ஆகிய செல்போன் எண்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் ஹலோ போலீஸ் எண் 72939 11100 என்ற செல்போன் எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments