உடலில் கேமராவை அணிந்தபடி சாலை விதிகள் மீறலை போலீசார் கண்காணிக்கும் நவீன வசதி அரசாணை வெளியீடு




உடலில் கேமராவை அணிந்தபடி சாலை விதிமீறலை போலீசார் கண்காணிக்கும் நவீன வசதியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

அமலாக்க சாதனங்கள்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் புதிய விதிகள் புகுத்தப்பட்டுள்ளன. அரசிதழில் வெளியிடும் நாளில் இருந்து அவை அமலுக்கு வரும். அதன்படி, சாலை பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பின் போது ‘செலான்' என்ற அபராதச் சீட்டை வழங்கும் மின் அமலாக்க சாதனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியின் சான்றளிக்கப்பட்ட சாதனமாக இருக்க வேண்டும். அந்த கருவிக்கான சான்றிதழ் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.

விரைவு கேமரா, சிசிடிவி, வேகத்தை அளவிடும் கருவி, உடலில் அணியக்கூடிய கேமரா, டேஷ்போர்ட்டில் வைக்கும் கேமரா, நம்பர் பிளேட்டின் மூலம் அனைத்து விவரங்களையும் தானாக சேகரிக்கும் வசதி, எடை கருவி உள்ளிட்ட வசதிகளை அமலாக்க சாதனங்கள் ஒருங்கிணைத்திருக்க வேண்டும்.

சாலை விதிகளை மீறுவோரை கண்டறியும் வகையில் போலீஸ் அதிகாரி தனது உடலில் கேமராவை அணிய வேண்டும். போலீஸ் வாகன டேஷ்போர்ட்டில் உள்ள கேமரா மூலமாகவும், சாலை விதிகள் மீறப்படுவதை கண்காணித்து படம்பிடிக்க வேண்டும்.

அபராத சீட்டு

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து வாய்ப்புள்ள இடங்கள், சந்திகள், 10 லட்சம் பேருக்கு மேல் உள்ள நகரங்களில் இந்த கருவிகள் வைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டுவது, பெல்ட் அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்களை டிரைவரோ அல்லது பின்னால் அமர்ந்திருப்பவரோ பின்பற்றாதது, தலைக்கவசம் அணியாதது, சிக்னலை மீறுவது,வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது, விதிப்படி அல்லாமல் மற்ற வாகனங்களை முந்திச்செல்வது, அதிக எடையுடன் வாகனங்களை செலுத்துவது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வது, நம்பர் பிளேட்டை விருப்பத்திற்கு ஏற்றார்போல் வைப்பது, அவசர கால வாகனங்களுக்கு இடம் அளிக்காமல் இருப்பது, இடையூறாக வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக எடுக்கப்படும் வீடியோக்கள், நேரம், இடம், தேதி ஆகிய பதிவுகளை பயன்படுத்தி, விதி மீறியவர்களுக்கு அபராத சீட்டை வழங்க வேண்டும்.

15 நாட்களுக்குள்...

கண்காணிப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு முன்பு, வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் எச்சரிக்கை சமிக்ஞைகள் வைக்கப்பட வேண்டும்.மின்சார அமலாக்க சாதனங்களை, சாலைவிதிகளை மீறியவர்களுக்கு எதிராக கோர்ட்டு வழக்கு விசாரணையின்போது பயன்படுத்தலாம். அபராதச் சீட்டை மின்னணு முறையில் வழங்க வேண்டும். ஆன்லைன் மூலமாக அபராதத்தை செலுத்தலாம். போக்குவரத்து காவல் நிலையங்களில் பணம், பண அட்டை மூலமாகவும் அபராதத்தை செலுத்தலாம்.

சாலை விதி மீறல் தொடர்பான நோட்டீசை சம்பந்தப்பட்டவருக்கு 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். விதிமீறல் தொடர்பான ஆதாரங்கள், அந்த அபராதம் செலுத்தப்படும் வரை பாதுகாக்கப்பட வேண்டும். வாகன உரிமையாளர் தவிர வேறு யாராவது வாகனத்தை ஓட்டி விதிகளை மீறியிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அதற்கான ஆதாரங்களை காட்டி உரிமையாளர் முறையிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments